அருந்தலாம், ஆடக் கூடாது: திறப்புக்குத் தயாராகும் கிளப்புகள்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் ஊரடங்குக்கு இடையே கடந்த மே 7 ஆம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் பலத்த எதிர்ப்பையும், நீதிமன்ற வழக்கையும் அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் மதுக்கடைகளைத் திறக்க தடை விதித்தது. தமிழக அரசு இதை எதிர்த்து உடனடியாக உச்ச நீதிமன்றம் சென்று, மே 15 முதல் டாஸ்மாக் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் சமூக இடைவெளியோடு கிளப்புகள், பப்புகளைத் திறக்க வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் தமிழகம் முழுதும் உள்ள கிளப்புகள் மற்றும் பப்கள் விரைவில் மீண்டும் திறக்கப்படலாம் என்ற தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையை மேற்கோள் காட்டி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்

இதுகுறித்து விசாரித்தபோது, “ கிளப்புகள், பப்புகளை திறக்க மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்… மாநில கலால் துறை தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கிளப்புகளில் கடைபிடிக்க வேண்டிய நிலையான இயக்க முறைமை விதிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதன்படி பார்கள், கிளப்புகள் மற்றும் பப்களுக்குள் இருப்பவர்களின் எண்ணிக்கை சமூக இடைவெளியை பராமரிக்கும் வகையில், வழக்கமாக இருப்பதில் பாதியாக குறைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் கிளப்புக்குள் அதிகபட்சம் ஒன்றரை மணி நேரம் மட்டுமே இருக்க அனுமதிக்கப்படுவார்கள். வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டுகொள்ள கிளப்புக்குள் நுழையும் ஒவ்வொருவரும் தங்கள் அலைபேசி எண்ணை பதிய வேண்டும். காற்றோட்டம், ஏ.சிக்கள் அணைப்பு ஆகிய வழக்கமாக விதிகள் பின்பற்றப்பட வேண்டும்.

பப்புகளில் மது அருந்துவது மட்டுமே அனுமதிக்கப்படும். நண்பர்களுடன் கண்ணாடிக் கோப்பைகளை டச் செய்து, சியர்ஸ் செய்யக் கூடாது. நடனமாடக் கூடாது. இந்தப் பாட்டைப் போடு, அந்தப் பாட்டைப் போடு என்று கட்டாயப்படுத்தக் கூடாது ஆகிய நிபந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளன” என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஹோட்டல் மற்றும் கிளப்களில் இயங்கும் 1,100 பார்களில், கிட்டத்தட்ட 450 சென்னையில் அமைந்துள்ளன. அரசின் இந்த முடிவு மெட்ரோ குடிமகன்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும் வகையில் இருக்கிறது.

**-வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share