தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் இன்று (செப்டம்பர் 28) நாம் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
தமிழக அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு மேம்பாட்டுத்துறையுடன் திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை அவருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆறு அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜூக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனுக்கு காதி மற்றும் பால் வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுவுக்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிதாக பொறுப்பேற்கவுள்ள அமைச்சர்களுக்கு நாளை மாலை 3.30 மணிக்கு கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவியா? – எடப்பாடி காட்டம்!