மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது.
தமிழக பாஜக தலைவர் முருகன் தலைவராக நியமிக்கப்பட்ட சில நாட்களில் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதனால் கட்சி ரீதியான அவரது செயல்பாடுகள் பெரிய அளவு பேசப்படாமல் இருந்தன.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல தளர தமிழ்நாடு முழுவதும் தனது முத்திரையைப் பதிக்க முருகன் முடிவு செய்து அதற்கான காய்களை நகர்த்தி வருகிறார்.
அதில் முக்கியமான ஒன்று தான் வெற்றிவேல் யாத்திரை. கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டிக் கவசத்தை கொச்சை படுத்தியதை கண்டித்து முருகன் களத்தில் இறங்கியிருக்கிறார். தமிழகம் முழுவதும் வேல் பூஜை நடத்திய முருகன் அதை யடுத்து வரும் நவம்பர் 6ஆம் தேதி முதல் திருத்தணியில் தொடங்கி டிசம்பர் 6 ஆம் தேதி திருச்செந்தூரில் முடியும் வகையில்… வெற்றிவேல் யாத்திரையை அறிவித்துள்ளார்.
முருகனின் ஆறுபடை வீடுகளையும் தொட்டுச்செல்லும் இந்த யாத்திரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் என்றும் இதற்கான விரிவான பயணத்திட்டம் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி, பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர் கூட்டத்தில் முருகன் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது.
நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரையிலான காலம் தமிழகத்தில் மழைக் காலம். மழைக்காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இதுபற்றி மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில் இந்த ஒரு மாத கால யாத்திரைக்கான அனுமதி வழங்குமாறு தமிழக டிஜிபி அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கமலாலய தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய கட்சிகளான அதிமுக திமுக உள்ளிட்ட யாரும் தங்கள் நிகழ்ச்சிகளை ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டே இதுவரை நடத்தி வந்திருக்கின்றன. ஆனால் கொரோனா தொற்று முழுவதுமாக அகற்றப்படும் என்ற உத்திரவாதம் ஏதும் இல்லாத நிலையில்… நவம்பர் மாதம் தொடங்கும் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அதிமுக விலேயே சிலர் முறையிட்டுள்ளனர். அரசியல் காரணங்கள் ஏதுமில்லாமல் சுகாதார காரணங்களாலேயே இதை நிராகரிக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் ஊர்வலங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள். முதல்வர் இது குறித்து அதிகாரிகளிடமும் போலீசாரிடமும் ஆலோசிக்க இருக்கிறார்.
இதேநேரம் இந்த யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அதை அரசியல் ரீதியாக பாஜகவுக்கு சாதகமாக பயன்படுத்துவது என்ற முடிவில் இருக்கிறார் முருகன். தமிழக அரசு அனுமதி கொடுத்தால் யாத்திரை நடத்துவது… கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்குச் சென்று அனுமதி பெறுவது என்றும் பாஜக தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.,”