தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2022 -23ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று(மார்ச் 19) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் உயர்கல்வியில் சேரும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய், ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களில் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
பட்ஜெட் உரை முடிந்ததும் நேற்று சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அப்போது பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறுகையில், “சட்டப்பேரவையில் மார்ச் 19 வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். தொடர்ந்து மார்ச் 21, 22 , 23 ஆகிய மூன்று நாட்களில் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும். வரும் 24ஆம் தேதி நிதியமைச்சர், வேளாண் துறை அமைச்சர் ஆகியோர் பதிலுரை அளிப்பர்.
பின்னர் அன்றுடன் நிதிநிலை அறிக்கைகள் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பேரவை தள்ளி வைக்கப்படும். 21,22,23 ஆகிய மூன்று நாட்களும் பேரவையில் கேள்வி நேரம் இடம் பெறும். 24 ஆம் தேதி கேள்வி நேரம் இல்லை.
அதுபோன்று துறை ரீதியான மானிய கோரிக்கை அரசின் ஆலோசனை அடிப்படையில் நடைபெறும். இந்தக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம், பட்ஜெட் மீதான நிதியமைச்சர் மற்றும் வேளாண் அமைச்சர் ஆகியோரின் பதில் உரைகள் நேரடியாக ஒளிபரப்பப்படும் ”என்று கூறினார்.
**-பிரியா**