விஜய் ஒரு ஜீரோ மாதிரி – என்ன சொல்கிறார் தமிழிசை?

Published On:

| By Pandeeswari Gurusamy

விஜய் ஒரு ஜீரோ மாதிரி தனியாக இருந்தால் மதிப்பில்லை என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (ஜனவரி 26) பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “தம்பி விஜய்க்கு அனுபவம் போதாது என்று தான் நான் நினைக்கிறேன். அவர் ‘தனித்து விடப்பட்டதால் உச்சபட்சத்தில் இருந்து வந்திருக்கிறேன்’ என்று சொல்கிறார். ஆனால் அரசியலில் நிறைய பேர் உச்சபட்சத்தில் இருந்து தான் வருகிறார்கள். நானே மருத்துவராக உச்சபட்ச பிராக்டிஸை விட்டுவிட்டு தான் அரசியலுக்கு வந்தேன். நடிகருக்கு டாக்டர் குறைந்தது கிடையாது. அதேபோல் தம்பி ஐபிஎஸ் அதிகாரி உச்சபட்ச பதவியில் இருந்து தான் அரசியலுக்கு வந்தார். இது அரசியலில் புதிதல்ல. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சிக்கு இது புதிது கிடையாது.

ADVERTISEMENT

ஏதோ ‘தியாகம் செய்கிறேன், தியாகம் செய்கிறேன்’ என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். 30 வருடமாக நடித்து முடித்துவிட்டு தானே தம்பி இப்போது வருகிறீர்கள்? தம்பிக்கு கொஞ்சம் அனுபவம் பத்தாது. ஒரு சின்ன தம்பி பேசுகிறார் என்று தான் நாம் எடுத்துக்கொள்ள முடியும்.

அவர் பேசுவதால் தேசிய ஜனநாயக கூட்டணி குறைந்துவிடப் போவதில்லை. என்டிஏ தான் வெற்றி பெறும். நீங்கள் உண்மையிலேயே போட்டி என்பது திமுக கூட்டணிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தான் என்று சொல்கிறீர்கள்.

ADVERTISEMENT

விஜய், கூடுதல் சக்தியாக வந்தால் சரி, இல்லையென்றால் தனி சக்தியாக என்று சொல்கிறார். ஆனால் கூடுதல் சக்தியாக அவரோடு வருவதற்கு கூட பலர் தயாராக இல்லை. ஏனென்றால் அவருக்கு அரசியலில் அனுபவம் இல்லை என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

விஜய் ஒரு ஜீரோ மாதிரி.. தனியாக இருந்தால் மதிப்பு கிடையாது. அதே ஜீரோ இன்னொரு எண்ணுடன் இருந்தால் தானே வேல்யூ வரும்? 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விஜய் நிம்மதியாக அரசியல் செய்யலாம். ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்தால், கரூர் சம்பவத்தை நினைவில் வைக்க வேண்டும்.

ADVERTISEMENT

திரைத்துறையில் இருந்து வந்த உடனே முதலமைச்சர் ஆவது கடினம். விஜய்க்கு அரசியலில் அனுபவம் இல்லாததால் தான் யாரும் கூட்டணிக்கு வரவில்லை. அதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். எந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெறுகிறதோ, அந்த கூட்டணிக்கு விஜய் ஆதரவாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share