‘ரெட்டி சமூகத்தை எதிர்த்து பேசல, தப்பா போட்டுடாதீங்க ப்ளீஸ்’ – பின் வாங்கிய தமிழிசை

Published On:

| By Pandeeswari Gurusamy

Tamilisai Soundararajan condemns the Vanni Arasu

சமூக நீதி இல்லாத ஒருவரை, ரெட்டி சமூகத்தை சேர்ந்தவரை இந்தியா கூட்டணி ஆதரிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.

கேரளத்தில் செப்டம்பரில் நடைபெறவுள்ள சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கோவையில் இன்று (ஆகஸ்ட் 25) செய்தியாளர்களை சந்திதார். அப்போது ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெறும் எந்தவித இந்துமத நிகழ்ச்சிகளுக்கும் செல்வதில்லை. ஆனால் கேரள முதல்வர் பினராய் விஜயன் அழைத்த உலக ஐயப்ப மாநாடு நிகழ்ச்சிக்கு செல்கிறார். இது எந்தவிதமான நம்பிக்கை என அவர் கூற வேண்டும். இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக முதல்வரின் செயல்கள் உள்ளன” என தெரிவித்தார்.

வன்னியரசுக்கு கண்டனம்

மேலும், “இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றுபவர் என்கிற அடிப்படையில் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு ராமர் குறித்து பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன்.

ADVERTISEMENT

சமூக நீதியையும் சமத்துவத்தையும் போற்றுவது கம்பராமாயணமும் ராமரும்தான் என்பதற்கு ராமாயணத்தில் உதாரணங்கள் உள்ளன. சமதர்மம் எனும் தர்மத்தை உடையவன் ராமன்.

திமுக ஆட்சியில் நடைபெறும் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கும், ஆணவக் கொலைகளுக்கு எதிரான சிறப்பு சட்டம் இயற்றுவதற்கும், ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தாமல், இங்கு நடைபெறும் ஆணவக் கொலைகளுக்கு ராமனும் சனாதன தர்மமும் காரணம் என்கிறார் வன்னியரசு. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணவக் கொலை தடுக்க ஸ்டாலினிடம் சென்று விசிக போராட்டம் நடத்த வேண்டும்.

ADVERTISEMENT

ராமனை வணங்குபவர்களின் ஒரு ஓட்டு கூட அவர்களுக்கு செல்லக்கூடாது, பாஜக சார்பில் வன்னி அரசுக்கு கம்பராமாயணம் புத்தகங்களை வழங்க உள்ளோம்” என தெரிவித்தார்.

ரெட்டி சமூகத்தை சேர்ந்தவரை ஆதரிக்கிறார்கள்

தொடர்ந்து அவர், “இந்தியா முழுவதும் சி.பி. ராதாகிருஷ்ணனை ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த சில சுயநல அரசியல்வாதிகள் மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை.
ரெட்டி சமூக நீதியை பாதுகாக்கின்றவரா? சிபிஆர் சமூக நீதியை பாதுகாக்க கூடிய சமூகத்தில் பிறந்தவர். சமூக நீதியை பற்றி பேசுவதற்கு இந்தியா கூட்டணிக்கு எந்த அருகதையும் கிடையாது.
இந்தியா கூட்டணி சமூக நீதி இல்லாத ஒருவரை ஆதரிக்கிறார்கள். ரெட்டி சமூகத்தை சேர்ந்தவரை ஆதரிக்கிறார்கள்” என பேசினார்.

பிறகு சட்டென சுதாரித்த தமிழிசை, ”ரெட்டி சமூகத்தை நான் எங்கும் குறைத்து மதிப்பிடவில்லை. அதே நேரத்தில் ரெட்டிக்கு ஸ்டாலின் ஆதரவு கொடுக்கும் போது, சமூக நீதிக்கு ஆதரவாக இருக்கும் சமூகத்தில் பிறந்தவரை ஏன் ஆதரிக்கவில்லை என்று தான் கேட்கிறேன். பின்னர் ரெட்டி சமூகத்தை எதிர்த்து நான் பேசினேன் என தயவு செய்து போட்டு விடாதீர்கள். ரெட்டி சமூகத்தைப் பற்றி நான் பேசவில்லை. ஜாதியை பற்றி பேசவில்லை” என கோரிக்கை விடுத்தார் தமிழிசை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share