மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் கையெழுத்து இயக்கம் நடத்தியபோது, போலீசாருக்கும் தமிழிசைக்கும் இடையே இன்று (மார்ச் 6) வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. Tamilisai Soundararajan argue police
மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக சென்னை எம்ஜிஆர் நகரில் தமிழிசை செளந்தரராஜன், கையெழுத்து இயக்கம் நடத்தினார். அப்போது அவரை சூழ்ந்த போலீசார், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சுட்டிக்காட்டி அங்கிருந்து கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.
இதனால் தமிழிசை செளந்தரராஜனுக்கும் போலீசாருக்கும் இடையே மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வாக்குவாதம் ஏற்பட்டது. அதேநேரத்தில், அங்கு குவிந்த திமுகவினர் மும்மொழி கொள்கைக்கு எதிராகவும், தமிழிசையை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “மூன்று மணி நேரம் வெயிலில் நின்ற பிறகு எனக்கு கையெழுத்து வாங்க அனுமதி கொடுக்கிறார்கள். இது ஆர்ப்பாட்டம் இல்லை, போராட்டம் இல்லை, அமைதியான முறையில் கையெழுத்து வாங்கி வருகிறோம். வசதிபடைத்த குழந்தைகளுக்கு மூன்று மொழியை கற்றுக்கொடுக்கிறீர்கள்.

அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பை கொடுங்கள் என்று நாங்கள் கேட்கிறோம். அமைச்சர்கள், முதலமைச்சர் வீட்டில் உள்ளவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி சொல்லிக்கொடுக்கப்படுகிறது.
இந்தி திணிப்பு என்ற ஒரு பொய்யான பிரச்சனையை சொல்கிறார்கள். அண்ணா தமிழகத்தை ஆளும் போது மூன்று கோடி பேர் தான் இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு தமிழகத்தில் 8 கோடி பேர் இருக்கிறார்கள். அவுட்டேட்டட் முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார், அப்டேட்டாக இல்லை. அவுட்டேட்டட் முதல்வரை வைத்துக்கொண்டு தமிழக இளைஞர்கள் முன்னேறவே முடியாது.
அமைதியான முறையில் கையெழுத்து வாங்க சென்ற எங்களை போலீசார் தடுக்கிறார்கள். கைது செய்யுங்கள் என்று சொன்னாலும் கைது செய்ய மறுக்கிறார்கள். தமிழகத்தில் பாமர மக்களுக்கான எங்களது சம கல்வி போராட்டம் தொடரும். எவ்வளவு அடக்குமுறை வந்தாலும் அதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்” என்று தெரிவித்தார்.
காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,
“ஏழை, எளிய குழந்தைகளுக்கும், தரமான கல்வியும், விருப்பமான மொழிகளும் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து, பாஜக சார்பாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தினை, சென்னையில் இன்று முன்னெடுத்துச் சென்ற தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநர், தமிழிசையை கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை.
அறுபது ஆண்டுகளாகத் தமிழ் மொழியை வியாபாரமாக்கி, தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்கும் திமுகவின் இரட்டை வேடம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. திமுகவின் நாடகத்தைப் பொதுமக்கள் உணரத் தொடங்கி, மும்மொழிக் கொள்கைக்குப் பெருமளவில் ஆதரவளிப்பது கண்டு, பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அதன் விளைவே, ஜனநாயக ரீதியாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தைத் தடுப்பதும், கைது செய்வதும். இந்தக் கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை.
தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வோம். எத்தனை பேரை உங்களால் சட்டவிரோதமாகக் கைது செய்ய முடியும் முதலமைச்சர் அவர்களே? தேசியக் கல்விக் கொள்கை, உங்கள் கட்சியில் இருக்கும் கடைக்கோடி தொண்டர்களின் குழந்தைகளுக்கும் தரமான கல்வியையும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பையும் அரசுப் பள்ளியில் இலவசமாக வழங்குகிறது. அதை ஏன் தடுக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். Tamilisai Soundararajan argue police
