கடந்த இரண்டு வருடங்களாக தெலங்கானா மாநில சட்டமன்றத்தின் கூட்டத்தொடர் ஆளுநர் உரை இல்லாமல் தொடங்கிய நிலையில்… இந்த ஆண்டு 2023 பிப்ரவரி 3ஆம் தேதி தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சட்டமன்றத்தில் உரையாற்றும் வாய்ப்பை தொடர்ந்து மறுத்து வந்த தெலங்கானா முதல்வர் கே.சி. சந்திரசேகர ராவின் அரசு, நீதிமன்றத்தை நாடியதன் விளைவாக இப்போது ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார்.
தெலங்கானா மாநிலத்தின் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 3 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட திட்டமிடப்பட்டது. அரசியல் சட்டப்படி பட்ஜெட்டுக்கு அம்மாநில ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
கடந்த ஜனவரி 21 ஆம் தேதி தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜனுக்கு பட்ஜெட்டை அனுப்பி வைத்தது மாநில அரசு. ஆனால் 30 ஆம் தேதி வரை ஆளுநரிடம் இருந்து பட்ஜெட்டுக்கான ஒப்புதல் கிடைக்கவில்லை.
பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை இருக்கிறதா என்று ஆளுநர் மாளிகையில் இருந்து அரசாங்கத்துக்கு தகவல் கேட்கப்பட்டது. ஆனால் அக்கடிதத்துக்கு அரசு எந்த பதிலையும் ஆளுநருக்குத் தெரிவிக்கவில்லை.
ஆளுநர் மாளிகையில் இருந்து இது தொடர்பாக நினைவூட்டும் கடிதம் ஒன்று அரசுக்கு அனுப்பப்பட்டும், தெலங்கானா மாநில சந்திரசேகர ராவ் அரசு அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில் பட்ஜெட்டுக்கான ஒப்புதலும் ஆளுநர் மாளிகையில் இருந்து அனுப்பப்படவில்லை.
இந்த நிலையில் மாநில அரசின் சார்பில் ஜனவரி 30 ஆம் தேதி தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் ஒரு அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தெலங்கானா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய பட்ஜெட்டுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளிக்கவில்லை.
பிப்ரவரி 3 ஆம் தேதி சட்டமன்றம் கூட இருக்கும் நிலையில், ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் பட்ஜெட் சமர்ப்பிக்க இயலாது. எனவே ஆளுநரை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவின் அடிப்படையில் தெலங்கானா அரசு சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ் ஆஜரானார். ஆளுநர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அசோக் மற்றும் ஆனந்தகுமார் ஆகியோர் ஆஜரானார்கள்.
இந்த வழக்கை விசாரித்த தெலங்கானா தலைமை நீதிபதி உஜ்ஜல் போயான், நீதிபதி துக்காராம் ஜி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், “நீதிமன்றம் எவ்வாறு ஆளுநருக்கு இது போன்ற விவகாரங்களில் உத்தரவிட முடியும்? நீதிமன்றம் தலையிட முடியுமா? என்பதே சந்தேகத்திற்குரியதுதான்.

நாளை நீங்களே நீதிமன்றம் தனது அதிகாரத்தை மீறி செயல்பட்டு உள்ளது என்று குற்றம் சாட்டுவீர்கள். எனவே மாநில அரசு ஆளுநர் ஆகிய இரு தரப்பினரும் உங்களது பிரச்சனைகளை பேசி தீர்த்து ஒரு கனிவான முடிவை இந்த நீதிமன்றத்திற்கு தெரிவியுங்கள் “என்று தெரிவித்தனர்.
நீதிபதிகளின் இந்த கருத்தை அடுத்து அதிர்ந்து போன கே.சி.ஆர். தரப்பு உடனடியாக ஆளுநரைத் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்துள்ளது. ‘சட்டமன்றம் மற்றும் மேலவையின் பட்ஜெட் கூட்டுக் கூட்டத் தொடரில் உரையாற்ற ஆளுநர் வரவேண்டும்’ என்று ஆளுநர் மாளிகைக்கு அரசுத் தரப்பில் தகவல் கேட்டு, அமைச்சர்கள் சந்திக்க நேரமும் கேட்டனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்த ஆளுநர் தமிழிசை உடனடியாக அமைச்சர்களை சந்திக்க ஒப்புதல் கொடுத்துவிட்டு, தனது புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தெலங்கானா ஆளுநர் மாளிகைக்கு சென்றார். இந்தத் தகவல் உயர் நீதிமன்றத்துக்கும் தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி 30 மாலையில் தெலங்கானா மாநில நிதியமைச்சர் ஹரிஷ் ராவ், சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெனுல பிரசாத் ரெட்டி, தலைமைச் செயலாளர் ராமகிருஷ்ண ராவ் ஆகியோர் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை ஆளுநர் மாளிகைக்கு சென்று சந்தித்து கடந்த இரு வருட தெலங்கானா வரலாற்றில் இல்லாத அளவுக்கு… சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்ற வருமாறு ஆளுநர் தமிழிசைக்கு அழைப்பு விடுத்தனர்.
இதுவரை நிலுவையில் இருக்கும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும்படியும், அதில் ஏதாவது விளக்கங்கள் தேவையெனில் அரசு தயாராக இருப்பதாகவும் அமைச்சர்கள் ஆளுநரிடம் தெரிவித்தனர். ஆளுநர் தமிழிசையும் அமைச்சர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டு பட்ஜெட் உரைக்கும், கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவதற்கும் ஒப்புதல் தெரிவித்தார்.
இதையடுத்து தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலங்கானா மாநில சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்ற இருக்கிறார். பட்ஜெட் உரைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று ஆளுநருக்கு எதிராக நீதிமன்றம் சென்ற தெலங்கானா அரசு இப்போது ஆளுநர் உரையையும் தயாரித்து வருகிறது.
ஆளுநர் உரையுடன் கூட்டம் ஆரம்பிக்க இருப்பதால் ஏற்கனவே திட்டமிட்டபடி பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்குமா அல்லது தாமதமாகுமா என்ற கேள்விகள் தெலங்கானா அரசியலில் எழுந்துள்ளன.

தமிழிசையை அவமதிக்கும் வகையில் ஆளுநர் உரை என்பதையே தவிர்த்து வந்தார் தெலங்கானா முதல்வர் கே.சி.ராவ். ஆனால் பட்ஜெட்டுக்கு ஆளுநரின் ஒப்புதல் அரசியல் சாசன சட்டம் 202 இன்படி அவசியம் என்பதால் இதை அடிப்படையாக வைத்து ஆளுநர் தமிழிசை, தெலங்கானா முதல்வருக்கு சட்ட ரீதியாக செக் வைத்திருக்கிறார். அதனால் தெலங்கானா மாநில அரசு, தன் பிடிவாதத்தைத் தவிர்த்து இப்போது ஆளுநர் உரையையும் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் இருந்து விருட்டென வெளியே சென்ற நிலையில் தனது சாதுர்யமான சட்ட ரீதியான காத்திருத்தலால், காய் நகர்த்தலால்… தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சட்டமன்றத்துக்குள் உரையாற்ற நுழைகிறார்.
–ஆரா
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க மீண்டும் கால அவகாசமா?
”ஜெயலலிதா கட்சியவே இங்கு சிலர் ஏலம் விடுறாங்க!” – முதல்வர் ஸ்டாலின்