தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை என்று திமுக எம்பிக்கள் கூறியுள்ளனர். tamiladu delimitation Protest will continue
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்வதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இது தொடர்பாக வரும் மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மூன்று மாநில முதல்வர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் திமுக எம்பிக்கள் தொகுதி மறு வரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பி வருகின்றனர்.
இன்று (மார்ச் 20) காலை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நியாயமான தொகுதி மறு வரையறை வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக #Fairdelimitation என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டி -. ஷர்ட்டை தமிழக எம்பிக்கள் அணிந்திருந்தனர்.
அதில் , Tamil Nadu will fight… Tamilnadu will win” என்ற வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இதே டி-ஷர்ட்டுடன் தமிழக எம்பிக்கள் அவைக்குள் சென்றனர்.
இதைப் பார்த்த மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா, “விதிகள் மற்றும் நடைமுறைகளுடன் மக்களவை செயல்படுகிறது. உறுப்பினர்கள் அவையின் கண்ணியத்தையும் மரியாதையையும் பராமரிக்க வேண்டும். ஆனால் சில எம்பிக்கள் விதிகளை பின்பற்றாமல் அவையின் கண்ணியத்தை மீறுகிறார்கள்” என்று கூறி மக்களவையை மதியம் வரை ஒத்தி வைத்தார்.
இதுபோல் மாநிலங்களவைக்கும் இதே டி-ஷர்ட் உடன் எம்பிக்கள் சென்றதால், அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் அவையை நண்பகல் வரை ஒத்தி வைத்தார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு எம்.பி, “தொகுதி மறுவரையறை தொடர்பாக விவாதிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாராக இல்லை. உடை நாகரிகம் குறித்து சபாநாயகர் பேசினார். ஆனால் நடைமுறையில் உடை கட்டுப்பாடு என்று எதுவும் கிடையாது. நாளையும் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று கூறினார்.
திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், “முன்னெப்போதும் இல்லாத வகையில் அவை தலைவர் எங்களுடைய உடையில் குறை சொன்னார். டி-ஷர்ட்டை மாற்றாவிட்டால் அவை நடக்காது என்று சொன்னார். ஆளுங்கட்சியினர் தங்கள் கருத்துகள், நம்பிக்கைகள் அடங்கிய வாசகங்களை கொண்ட சால்வை, மாஸ்க்கை அவைக்கு அணிந்து வரும்போது, அதை யாரும் எதுவும் சொல்வதில்லை.
எனவே சபாநாயகரின் செயல் ஜனநாயகத்துக்கு விரோதமானது. எதிர்க்கட்சிகளே இல்லாத அவையை அவர்கள் விரும்புகிறார்கள்.
உரிய பதில் கிடைக்கும் வரையில் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் போராடுவோம்.
நாடாளுமன்ற நாட்களை கூட குறைக்கிறார்கள். பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வரும் நாட்களை விரல் விட்டுக் கூட எண்ண முடியாது. அந்தளவுக்கு நாடாளுமன்றத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்றார். tamiladu delimitation Protest will continue