தென் சென்னையில் போட்டியிடும் ஸ்டார் வேட்பாளர்களான தமிழிசையும், தமிழச்சி தங்கப்பாண்டியனும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
மக்களவைத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கும் வேளையில் தமிழக அரசியல் களம் கொளுத்தும் வெயிலுக்கு சமமாக அனல் பறந்துகொண்டிருக்கிறது.
தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27 கடைசி நாள் என்ற நிலையில், இன்று பல்வேறு மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
இதில் வட சென்னையில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற அதிமுக திமுகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தென்சென்னையில் திமுக பாஜக வேட்பாளர்கள் கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினர்.
தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் எம்.பி.தமிழச்சி தங்கப்பாண்டியன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன், பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் என ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழிசை போட்டியிடுகிறார். தென் சென்னையில் நாம் தமிழர் கட்சியோடு சேர்த்து நான்குமுனை போட்டி இருந்தாலும், தமிழச்சியா, தமிழிசையா? இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில் தமிழிசை, தமிழச்சி தங்கபாண்டியன் இருவரும் இன்று (மார்ச் 25) ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சென்னை மாநகராட்சி தெற்கு வட்டாரத் துணை ஆணையர் அலுவலகத்தில், வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் வெளியே வந்தபோது, அங்கு தமிழிசை வருவதை பார்த்த தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர் அருகே சென்றார்.
இருவரும், எப்படி இருக்கீங்க? என நலம் விசாரித்துக்கொண்டு… ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
தேர்தல் களத்தில் எதிரெதிர் வேட்பாளர்களாக இருந்தாலும், எதிரில் சந்திக்கும்போது தோழிகளாக இருவரும் அன்பை பகிர்ந்து பேசிக்கொண்டது அங்கிருந்த திமுக, பாஜக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக திருவான்மியூரில் நடந்த தேசிய ஜனநாய கூட்டணியின் தென்சென்னை பாஜக வேட்பாளரை ஆதரித்து நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “இந்த தொகுதியில் நாடாளுமன்ற எம்.பி,யாக இருந்தவர் இனி இருக்கப்போவதில்லை” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அரை மணி நேரத்தில் 50% சார்ஜ்…. என்ன மாடலா இருக்கும்?
திமுக கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் சிக்கல்!