சித்திரை திருநாள்: இயற்கையை வரவேற்கும் விழா

Published On:

| By admin

சித்திரை 1ஆம் தேதி தமிழ் புத்தாண்டாக, சித்திரை திருநாளாக தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சித்திரை முதல் நாளான இன்று ‘பிலவ’ ஆண்டு நிறைவுபெற்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்துள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி காலை முதலே கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மக்கள் அதிகாலை முதலே கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். அதேவேளை, தமிழ் மக்கள் தங்கள் வீடுகளிலும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

சித்திரை மாதத்தில் பகல் நேரம் அதிகரித்து, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்கள் அதிக வளர்ச்சி பெறுகிறது. அறிவியல் பூர்வமாகவும் சித்திரை மாதம் வசந்த காலத்தின் தொடக்கமாகவே உள்ளது. உலகமெங்கும் பருவ காலங்கள் 4 என்று பிரித்த போது தமிழர்கள் கார்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் என 6 பருவங்களாக பிரித்தனர்.

ADVERTISEMENT

தமிழர்களுக்கு வசந்தகாலம் என்பது கிடையாது. இளவேனிற்காலம்தான் வசந்தகாலத்தின் தொடக்கமாக உள்ளது. இந்த இளவேனிற்காலத்தின் தொடக்கம் சித்திரை மாதமாகும். சித்திரை தொடங்கி வைகாசி வரையான இளவேனிற்காலத்தின் தொடக்க நாளை பல்வேறு வகைகளில் நாம் வரவேற்கிறோம்.

சித்திரை மாதத்தில் சூரியன் பூமத்திய ரேகையின் மையப்புள்ளியில் வருகிறது. இது இளவேனிற் காலத்தின் தொடக்கம். இரவு குறைந்து பகல் நேரம் அதிகமாகும். இந்த காலத்தில் கொன்றை உள்ளிட்ட மரங்கள் பூத்துக்குலுங்கும். மரங்கள் புதிய கிளைகள் விட்டு வளர்ச்சி அடையும். தேனடைகளில் தேன் அதிகமாகும். மா மரங்கள் அதிக காய்களைத் தரும், பலாப்பழங்கள் காய்த்து தொங்கும், வாழை அறுவடைக்காலம் என்று இயற்கையும் வரவேற்கும் விழாவாக சித்திரை திருநாள் அமைகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share