சென்னை புத்தக திருவிழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜனவரி 4) பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சென்னை புத்தக திருவிழா கடந்த ஆண்டு டிசம்பர் 27-ஆம் தொடங்கியது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் புத்தக திருவிழாவுக்கு வந்து புத்தகங்களை அள்ளிச் செல்கின்றனர். தினமும் பல்வேறு நூல்கள் இந்த திருவிழாவில் வெளியிடப்படுகிறது.
அந்தவகையில், டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தின் சார்பில் எழுத்தாளர் பால முரளிவர்மன் தொகுத்த ‘தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?’ என்ற நூலை சீமான் இன்று வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டதால், சர்ச்சை வெடித்துள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, சென்னை புத்தகக் கண்காட்சியை நடத்தும் பாபாசி அமைப்பின் செயலாளர் எஸ்.கே.முருகன் அளித்துள்ள விளக்கத்தில், “சீமான் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து தவிர்க்கப்பட்டு, புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டதற்கும் பபாசிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
அவசர செயற்குழுவை கூட்டி நிகழ்ச்சியை நடத்திய டிஸ்கவரி புக் பேலஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது திராவிட நல் திருநாடு என்ற வரி தவிர்க்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது இதுதொடர்பாக பேசிய சீமான்,”நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பாடலே இருக்காது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிடம் என்ற சொல் எங்கிருந்து வந்தது” என்று கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணா பல்கலை மாணவி வழக்கு: திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா?: டிஜிபி முக்கிய அறிவிப்பு!