பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மாம்பலத்தில் உள்ள கோசாலையில் கடந்த 15ம் தேதி மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் சென்னை ஐஐடியின் இயக்குனரான காமகோடி பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது. இது ஜுரத்தை கூட சரியாக்கும். பாக்டீரியா, பூஞ்சை பாதிப்புகளுக்கு எதிராக செயல்படுவதால் இதற்கு இந்த தனிச்சிறப்பு உண்டு.
ஒருமுறை சந்நியாசி ஒருவருக்கு மிகுந்த காய்ச்சல் இருந்தது. அவர் கோமியத்தை குடித்தார். அவருக்கு 15 நிமிடங்களில் காய்ச்சல் விட்டுவிட்டது” என்று கூறியிருந்தார். ஐஐடி இயக்குநராக காமகோட்டியின் பேச்சு இந்தியா முழுவதும் வேகமாக பரவியது. பலரும் அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். ஒரு சில மருத்துவர்களும் கண்டித்திருந்தனர். இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் இப்படி பேசுவதா? என்று பலரும் அவர் மீது பாய்ந்தனர்.
இந்த நிலையில், ஷோகோ நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் பேராசிரியர் காமகோடியின் கருத்துக்கு ஆதரவளித்து எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘காமகோடி சிறந்த ஆராய்ச்சியாளர் மற்றும் கல்வியாளர். பசுவின் சிறுநீரின் நன்மைகள் குறித்த அறிவியல் கட்டுரைகளை மேற்கோள் காட்டிதான் அவர் பேசினார். நவீன விஞ்ஞானம் நமது பாரம்பரிய மதிப்பை அதிகளவில் அங்கீகரித்து கொண்டிருக்கின்றன. ஆனால், எதையும் புரிந்து கொள்ளாத நெட்டிசன்கள் எந்த அறிவியல் அறிவும் இல்லாமல் தங்களின் சொந்த தவறான கருத்துகளை பரப்புகின்றனர். உறுதியாக இருங்கள் பேராசிரியர் காமகோடி. உங்களை வேண்டுமென்றே இழிவு படுத்துபவர்களை கண்டு அச்சம் கொள்ள வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.