மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று அதை யுடியூபில் ஒளிபரப்பி வருபவரான டிடிஎஃப் வாசன் இன்று (செப்டம்பர் 30) கைது செய்யப்பட்டார், கோவை மாவட்டம் சூலூர் போலீஸார் அவரை கைது செய்திருக்கிறார்கள்.
டூவீலர்களில் அதிவேகத்தில் ஓட்டி அதை வீடியோ எடுத்து யுடியூபில் வெளியிட்டு வந்த வாசனுக்கு ஏராளமான ஃபாலோயர்கள் இருந்தனர். இவர் சமீபத்தில் கோவைக்கு சென்றபோது கூடிய கூட்டத்தால் போலீஸாரே மிரண்டு போனார்கள்.
இந்த நிலையில் கடந்த வாரம் டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்துவை தனது டூவீலரில் பின்னால் அமரவைத்து மிக வேகமாக ஓட்டி அதை யுடியூபில் வாசன் வெளியிட்டிருந்தார்.
ஏற்கனவே வாசன் குறித்து பலரும் கடும் விமர்சனங்களை செய்து வந்த நிலையில் இந்த சம்பவம் பரபரப்பானது. இதுகுறித்து கோவை மாநகர போலீசார் செப்டம்பர் 24 ஆம் தேதி ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தனர்.
அதில், “செப்டம்பர் 14ம் தேதி டிடிஎஃப் வாசன் என்ற நபர் அவரது இரு சக்கர வாகனத்தில் யுடியூபர் ஜி.பி.முத்துவை பின்சீட்டில் அமரவைத்து கோவை மாநகரம், டி3 போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்காடு மெயின் ரோடு, எம்டிஎஸ் பேக்கரி அருகே அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாகவும் வாகனத்தை ஓட்டி அதை பதிவு செய்து யுடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டார்.
அந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து போத்தனூர் போலீசார் ஐபிசி 279 மற்றும் மோட்டார் வாகன சட்டம் 184 பிரிவுகளின் கீழ் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் டிடிஎஃப் வாசன் மீது சூலூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்” என்று தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சுமார் ஐந்து நாட்களுக்கு மேலாகியும் வாசன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வாசனுக்கு பின்புலமாக அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவரே இருப்பதாக தகவல்கள் வந்தன.
இதற்கிடையே வாசன், செய்தி சேனல்களை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டார்.
இந்த நிலையில் பெங்களூருவுக்கு தப்பிச் செல்ல முயன்ற வாசனை இன்று (செப்டம்பர் 30) இரவு சூலூரில் வைத்து போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
கைது செய்த கொஞ்ச நேரத்திலேயே அவரை போலீஸ் ஸ்டேஷன் ஜாமீனிலேயே விடுதலை செய்துவிட்டார்கள் போலீஸார். இது சமூக தளங்களில் விமர்சனங்களை அதிகப்படுத்தியுள்ளது.
–வேந்தன்
நவம்பர் 6 இல் ஆர்.எஸ்.எஸ். பேரணி: உயர் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
டிஜிட்டல் திண்ணை: பிஎஃப்ஐ தடை- ஸ்டாலினைச் சுற்றிய சர்ச்சை! நடந்தது என்ன?