உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் வாழ்க்கையே துயரங்களும் சோகங்களும் நிறைந்தது. பெரும்பாலான காமெடி நடிகர்களின் வாழ்க்கை துயரம் நிறைந்தாகவேதான் இருந்துள்ளது. இது, அப்படியே யூடியூபர் ராகுல் டிக்கிக்கும் பொருந்தும். தனது வீடியோவால் அனைவரையும் சிரிக்க வைத்தாலும , அவரின் சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்தது.
ராகுல் டிக்கி சிறுவயதாக இருக்கும் போதே, தந்தை மற்றொரு குடும்பத்துடன் சென்று விட்டார். அவரின் தாயார்தான் கஷ்டப்பட்டு வளர்த்துள்ளார். தந்தை இல்லாத நிலையில், தாயாருக்கு தெரியாமல் செருப்பு தைக்கிற வேலை, செப்டிங் டேங்க் கழுவும் வேலை போன்றவற்றை ராகுல் பார்த்துள்ளார். நிறைய அவமானங்களை கடந்துதான் இப்போது முன்னேறி வந்து கொண்டிருந்தார். அதற்குள் காலன் அவரை அழைத்து கொண்டான். என்ன நடந்தது என்று பார்ப்போம்…
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் டிக்கி. டான்ஸ் மாஸ்டரான இவர், Rahul Tikki என்ற பெயரில் யூட்யூப் சேனலை நடத்தி வந்தார். டான்ஸ் மட்டுமல்ல . ஃபன்னாகவும் நடிப்பார். இன்ஸ்டாவிலும் பல்வேறு நடிப்பு வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாக இருந்தார். கிட்டத்தட்ட 7 .9 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாவில் பின் தொடர்கின்றனர்.
ராகுலுக்கும் கவுந்தப்பாடி நேரு நகரைச் சேர்ந்த வேலுமணி என்பவரது மகள் தேவி ஸ்ரீ என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு ராகுல் கவுந்தம்பாடியிலுள்ள மாமியார் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அங்கிருந்த தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து வர அவர் அங்கு சென்றதாக தெரிகிறது.
கவுந்தப்பாடியை நெருங்கிய போது, சாலையில் தடுப்பின் மீது மோதி ராகுல் படுகாயம் அடைந்துள்ளார். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபிச் செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராகுல், வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்து விட்டனர். தொடர்ந்து அவரது உடல், மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பலியான ராகுலுக்கு 27 வயது மட்டுமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராகுலின் உடலை கண்டு தாயார், மனைவி உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைத் தளத்திலும் அவரின் மறைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தனது வீடியோவால் பலரையும் சிரிக்க வைத்த ராகுல் டிக்கிக்கு பல கனவுகள் இருந்துள்ளது. ஆனால், எதுவும் நிறைவேறவில்லை என்பது பலரும் அறியாதது. ராகுல் டிக்கிக்கும் மிகப் பெரிய நடிகராகவும் வரவேண்டும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். குக் வித் கோமாளியில் பங்கேற்க வேண்டும் என்றெல்லாம் ஆசை. இந்த மூன்று ஆசைகளுமே கடைசி வரை நிறைவேறவில்லை.
தந்தை இல்லாத நிலையில் ராகுலின் தாயார் அவரை கஷ்டப்பட்டு வளர்த்துள்ளார். தனது தாய்க்காக பிரமாண்ட வீடு ஒன்றை கட்ட வேண்டும். அந்த வீட்டில் தாயாரை குடியேற வைக்க வேண்டும். கார் வாங்கி அதில் தாயாரை வைத்து ஓட்டி பார்க்க வேண்டுமென்பதும் கனவாக இருந்தது. ஆனால், இந்த ஆசைகள் எதுவுமே நிறைவேறவில்லை. மாறாக, தன் தாயாரை பாதியிலேயே விட்டு ராகுல் டிக்கி இறந்து போனதுதான் சோகத்திலும் சோகம்.
ராகுல் டிக்கியின் நண்பர்கள் கூறுகையில், இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, ராகுல் டிக்கி ஹெல்மட் அணியவில்லை என்று போலீசார் கூறுகின்றனர். ஆனால், ராகுல் டிக்கி ஹெல்மட் அணிந்துதான் சென்றார் என்று தெரிவிக்கின்றனர். மேலும், பிக்பாஸ் 8 க்குள் நுழைந்து விட ராகுல் முயற்சித்தார். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படி வாய்ப்பு கிடைச்சிருந்தா ராகுல் டிக்கி இன்று உயிரோடு இருந்திருப்பார் என்று உருக்கத்துடன் கூறுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்