புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியதற்காக பீகார் யூடியூபர் மணீஷ் காஷ்யப் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் புலம்பெயர் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவியது.
இணையத்தில் வேகமாய் பரவிய இந்த விவகாரம் பீகார் முதலமைச்சர் வரை சென்றது.
இதனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார் முதலமைச்சரை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் அளித்ததோடு, புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தார்.
தமிழ்நாடு காவல்துறையும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.
வதந்தி பரப்பியது தொடர்பாக பீகாரை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக பீகார் மாநில பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கவும் மறுத்துள்ளது.
இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை பீகாரை சேர்ந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப் அவரது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனால் இந்த விவகாரத்தில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த மணீஷ் காஷ்யப் பீகார் மாநிலம் ஜகதீஷ்பூர் காவல் நிலையத்தில் மார்ச் 22 ஆம் தேதி சரண் அடைந்தார்.
கிட்டதட்ட திரைப்படம் போல், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதை வடிவமைத்து, காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை நீதிமன்ற காவலில் வைக்க பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பின்னர், மணீஷ் காஷ்யப்பை தமிழ்நாடு தனிப்படை காவல்துறை கைது செய்தது. தமிழகம் அழைத்து வரப்பட்ட அவர் கடந்த மார்ச் 30 ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏப்ரல் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஏற்கனவே கைதான மணீஷ் காஷ்யப் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மதுரை மாவட்ட எஸ்.பி சிவ பிரசாத் தெரிவித்துள்ளார்.
மோனிஷா
தென்னிந்திய நடிகர்களை குறிவைக்கும் பாலிவுட்!
சாதிய பிரச்சனையின் மையக்கதை?: இராவணக் கோட்டம் டிரெய்லர்!
எதிர்ப்பை மீறி செயல்படும் கூடங்குளம் அணுமின் நிலையம்: ரவிக்குமார் எம்.பி