கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார். மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால்தான் விக்னேஷ் உயிரிழந்திருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் பாலாஜியை நேற்று முன்தினம் (நவம்பர் 13) புதுபெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் கத்தியால் குத்தினார்.
இந்த சம்பவம் தமிழக அரசு மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பெரும்பாலான மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்தனர்.
இந்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், கிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞரான விக்னேஷ் இன்று (நவம்பர் 15) உயிரிழந்தது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
பெரும்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ்(31), பித்தப்பை கல் பிரச்னையால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு பணம் செலுத்த முடியாததால் குடும்பத்தினர் விக்னேஷை அழைத்து வந்து கிண்டி அரசு மருத்துவமனையில் கடந்த 13ஆம் தேதி இரவு அனுமதித்தனர்.
முதலில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் பொதுபிரிவுக்கு மருத்துவர்கள் மாற்றினர். ஆனால் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மீண்டும் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை உயிரிழந்தார் விக்னேஷ். இவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் குழந்தை உள்ளது.
விக்னேஷ் உயிரிழந்த செய்தியறிந்து மருத்துவமனைக்கு வந்த அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் கதறி அழுதனர்.
மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததுதான் விக்னேஷ் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறி அவர்கள் மருத்துவ பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்னேஷின் உறவினர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கிண்டி மருத்துவமனையில் அனுமதித்தது முதல் விக்னேஷுக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. செவிலியர்களிடம் கேட்டால் மருத்துவர்கள் பணியில் இல்லை விக்னேஷ் நன்றாகத்தான் இருக்கிறார் என்று கூறினர்.
நேற்று காலை உடல்நிலை மோசமடைந்த நிலையில் கூட மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை. மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் எப்போது பணிக்கு வருவார்கள் என தெரியவில்லை என்று செவிலியர்கள் தெரிவித்தனர்.
நேற்று இரவு 12 மணிக்கு ஐசியுவில் இருந்த போதும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை. வேறு மருத்துவமனைக்கு மாற்றிக்கொள்கிறோம் என்று விக்னேஷ் மனைவி பரிமளா தெரிவித்த போது, டிஸ்சார்ஜ் செய்வதற்கான அதிகாரம் என்னிடம் இல்லை என்று செவிலியர் ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை உயிரிழந்துவிட்டார்” என்றார்.
விக்னேஷ் மரணம் குறித்து கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
“ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, நோயின் தீவிரத்தோடுதான் இங்கு வந்தார். அனைத்து மருத்துவர்களும் பணியில் இருந்தனர். செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
முறையாக சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்” என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
செந்தில் பாலாஜி வழக்கில் தடைகோரி மனு : எச்சரித்த நீதிபதி!
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: தனிப்பெரும்பான்மை பெற்றது என்.பி.பி!