பெசன்ட் நகரில் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது காரை ஏற்றி உயிரிழப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் எம்.பி.ஒருவரின் மகள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெசன்ட் நகர் அருகே ஊர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா. வயது 22.
நேற்று இரவு பெசன்ட் நகர், டைகர் வரதராச்சாரி சாலையோரத்தில் உள்ள நடைபாதையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவ்வழியாக தாறுமாறாக வந்த சொகுசு கார் ஒன்று சூர்யா மீது ஏறி இறங்கியதில் அவர், படுகாயமடைந்தார்.
அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய அந்த காரில் இரு பெண்கள் இருந்ததாகவும், அவர்களில் ஒருவர் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இருவருமே மதுபோதையில் இருந்ததாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து சாஸ்திரி நகர் போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே உயிரிழந்த சூர்யாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்தியது ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. பீடா மஸ்தான் ராவீன் மகள், பெசன்ட் நகரில் வசித்து வரும் பீடா மாதுரி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அவர் மீது அஜாக்கிரதையாக காரை ஓட்டி மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்தசூழலில் போலீஸில் சரணடைந்த பீடா மாதுரியை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
’நடிகர் விஜய், எம்.ஜி.ஆர். போன்றவர்’ – செல்லூர் ராஜூ