திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்த நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (டிசம்பர் 22) அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்ற இளைஞர், வழக்கு விசாரணைக்காக கடந்த 20ஆம் தேதி நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அங்கு 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து நீதிமன்ற வாயில் அருகே வைத்து ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொன்றது.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வு, தாமாக முன் வந்து இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
காவல்துறை ஏன் தடுக்கவில்லை?
அப்போது, “நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை ஏன் காவல்துறை தடுக்கவில்லை?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கொல்லப்பட்டவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறினார். மேலும், நீதிமன்ற வளாகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்ததாகவும், இதில் தொடர்புடைய ஒரு குற்றவாளியை, நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திலேயே கைது செய்ததாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, திருநெல்வேலி சம்பவம் தொடர்பாகவும், மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பு பணிகள் தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒருநாள் தள்ளிவைத்தனர்.
செல்போனில் மூழ்கிய போலீஸ் – நீதிபதிகள் வேதனை!
அதன்படி இந்த வழக்கு நேற்று (டிசம்பர் 22) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, இளைஞர் கொலை தொடர்பாக சீல் வைத்த உறையில் அறிக்கை மற்றும் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சியையும் தாக்கல் செய்தனர்.
வீடியோ காட்சிகளை கண்ட நீதிபதிகள், ஒரே ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் மட்டுமே வெட்டிய நபரை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, ”எதற்காக கொலை சம்பவம் நடைபெற்றது என்பதை விட, சம்பவம் நடந்த இடம் தான் கவலை அளிப்பதாக உள்ளது. நீதிமன்ற வாயிலில் இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் சாட்சிகள் எப்படி சாட்சி கூற நீதிமன்றத்திற்கு வருவர்? பணியில் இருக்கும் காவல்துறையினர் பணியை விட தங்களது செல்ஃபோனில் மூழ்கி கிடக்கின்றனர்” என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், 90 சதவீத காவல்துறையினர் அர்பணிப்புடன் பணியாற்றுவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, கொலை சம்பவத்தின் போது பணியில் இருந்து தவறிழைத்த போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி காவல்துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் குற்றவாளியை துணிச்சலுடன் பிடித்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஊய்க்காட்டானுக்கு பாராட்டு தெரிவித்ததோடு அவருக்கு உரிய பரிசு வழங்க வேண்டுமெனவும்,
நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடு செய்யும் வரை இடைக்கால ஏற்பாடாக மாவட்ட நீதிமன்றங்களுக்கு தேவையான ஆயுதம் தாங்கிய காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க டிஜிபி சங்கர் ஜிவால் இன்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கைத்துப்பாக்கி, நீண்ட தொலைவில் குறி வைத்து சுடும் துப்பாக்கிகளை வைத்திருக்கவும், நாளைக்குள் (டிசம்பர் 23) இதுதொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தகவல் தெரிவிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
திமுக செயற்குழு கூட்டத்தில் அமித் ஷா, அதிமுகவுக்கு எதிராக தீர்மானம்!