இன்று (ஜனவரி 29) காலை முதல் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. youth chased the women car on the ECR
அதில், திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள், இளம் பெண்கள் சென்ற காரை சினிமா பாணியில் சேஸ் செய்து நடுரோட்டில் வழிமறித்து நிறுத்தினர்.
அந்த காரில் இருந்து இறங்கி ஓடி வந்த இளைஞர் ஒருவர் பெண்கள் வந்த காரின் ஓட்டுநர் பக்கம் இருக்கும் கண்ணாடியை தட்டி, டோரை திறக்க முயல்கிறார்.
இதையடுத்து பெண்கள் வந்த காரை ஓட்டியவர், வண்டியை பின்னாடி எடுத்து வளைத்துக்கொண்டு செல்கிறார். எனினும் விடாமல் அவர்களை திமுக கொடி கட்டிய காரில் வந்தவர்கள் துரத்துகின்றனர்.
இதனால் பதறிப்போன பெண்கள், மாமாவுக்கு போன் பண்ணுங்க… டோரை திறக்காதீங்க… பாதுகாப்பு இல்லை என அலறுகின்றனர்.

என்ன நடந்தது?
இந்த வீடியோ பற்றி நாம் விசாரித்தபோது,
“கடந்த 26ஆம் தேதி காலை 3.30 மணியளவில் ஈசிஆர், முட்டுக்காடு பாலத்தில் சில கார்கள் நின்று கொண்டிருந்தன. அதில் வந்தவர்கள் காரை விட்டு இறங்கி, கடல் காற்றை சுவாசித்தப்படி இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தனர். சில காதல் ஜோடிகளும் இரு பக்கமும் நின்று கொண்டிருந்தனர்.
அந்த பாலத்தில் ஒரு சஃபாரி காரும், ஒரு தார் காரும் அருகருகே நின்றன. இதில் சஃபாரி காரை வேறொரு கார் உரசிவிட்டது.
இதனால் உரசிய காரில் இருந்தவர்களுக்கும், சஃபாரி, தார் கார்களில் வந்தவர்களுக்கும் இடையே வாய் சண்டை ஏற்பட்டு சலசலப்பு ஏற்பட்டது.
உரசிய காரில் இருந்த ஒரு ஆணும், 5 பெண்களும், அந்த இளைஞர்களை அசிங்கமாக திட்டிவிட்டு, ‘இதோ வரேன்டா’ என்று கூறி காரை வேகமாக எடுத்தனர்.
அப்பார்ட்மெண்ட் வரை சேஸிங்

இதனால் ஆத்திரமடைந்த சஃபாரி காரில் வந்தவர்களும், தார் காரில் வந்தவர்களும், அந்த பெண்களின் காரை விரட்டி சென்று மடக்கி நிறுத்தி, திறக்க முயன்றனர். ஆனால் பெண்கள் தாங்கள் இருந்த காரை சாதுர்யமாக ரிவர்ஸ் எடுத்து அவர்கள் வசித்து வரும் சாகர் அப்பார்ட்மெண்ட்டுக்கு சென்றுவிட்டனர்.
இருந்தும் விடாமல் அப்பார்மெண்ட்டுக்கே வந்து கேட்டை வேகமாக தட்டி கத்தியுள்ளனர். அந்த இளைஞர்கள். அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டிகள், இளைஞர்களை அங்கிருந்து கிளம்புமாறு கண்டித்தும் அவர்கள் கிளம்பவில்லை.
இதனால் இளைஞர்களுக்கும் செக்யூரிட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
அந்தசமயத்தில் அந்த பெண்களில் ஒருவர் போலீஸ் அவசர உதவி எண்ணான 100க்கு தொடர்பு கொண்டு, ‘எங்கள் அப்பார்ட்மெண்ட்டில் புகுந்து தங்களை தாக்க முயற்சிக்கிறார்கள்’ என்று புகார் சொல்லியுள்ளார்.
இதையடுத்து கானாத்தூர் போலீசார், சாகர் அப்பார்ட்மெண்டுக்கு சென்று விசாரித்துவிட்டு, என்ன நடந்தது என்று புகார் கொடுங்கள் என்று கேட்டனர்.
கானாத்தூர் காவல் நிலையத்தில் காரில் வந்த செல்வி.சின்னி திலாங் மதியம் 12 மணியளவில் புகார் கொடுத்தார். அதில் ‘இரண்டு கார்களில் வந்தவர்கள், எங்களை அப்பார்ட்மெண்ட்டில் புகுந்து தாக்க முயன்றனர்’ என்று தெரிவித்துள்ளார். போலீசார் புகாரை பெற்றதற்கான சிஎஸ்ஆரை கொடுத்து அனுப்பினர்.
வீடியோ வெளியீடு
இந்த புகார் பெறப்பட்டு 3 நாள் கடந்தும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்ற கோபத்தில் சின்னி திலாங் தரப்பில் இருந்து, இளைஞர்கள் விரட்டி வந்த வீடியோ வெளியிடப்பட்டது.
இந்த வீடியோவை பார்த்த காவல்துறை உயரதிகாரிகள் தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடாக், துணை ஆணையர் கார்த்திகேயேனிடம், சம்பவம் நடந்து மூன்று நாள் ஆகியும் இன்னும் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை. பெண்களை துரத்தியவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காரின் உரிமையாளார்கள் யார்? காரில் வந்த இளைஞர்கள் யார்? என தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். இதில் சஃபாரி கார் கன்னியாகுமரியை சேர்ந்ததும், தார் கார் நங்கநல்லூரைச் சேர்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது” என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

அண்ணா பல்கலை கழக மாணவிக்கு நடந்த கொடுமையை தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கும் இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சியான அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.