தூத்துக்குடியில் பனிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவியை இளைஞர் ஒருவர் ஒருதலை காதல் காரணமாக வெட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் பனிரெண்டாம் வகுப்புக்கு நடைபெற்ற பொதுத் தேர்வு இன்று (ஏப்ரல் 3) முடிவடைந்தது. தேர்வு முடிந்ததால் பல்வேறு இடங்களிலும் மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் தூத்துக்குடியில் தேர்வு முடிந்து வந்த மாணவியை இளைஞர் ஒருவர் அரிவாளால் தலையில் வெட்டியிருப்பது சக மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை முடித்துவிட்டு வெளியே வந்துள்ளார் செக்காரக்குடியைச் சேர்ந்த கருப்பசாமி மகள்.
அப்போது அங்கு ஆயுதத்துடன் பள்ளிக்கு வெளியே அதேபகுதியைச் சேர்ந்த சோலையப்பன்(21) மாணவி எப்போது வருவார் என காத்திருந்திருக்கிறார். இந்நிலையில்தான் மாணவி வெளியே வந்ததை பார்த்து, அவர் அருகே சென்று தலை கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
அப்போது, ‘ஒரு வருஷமா உன்ன காதலிக்கிறேன். நீ பதில் எதுவும் சொல்லவில்லை. எனக்குக் கிடைக்கவில்லை என்றால், நீ வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது’ எனக் கூறிக்கொண்டே மாணவியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அங்கு பார்த்துக்கொண்டிருந்தவர்கள், சோலையப்பனை பிடிக்க முற்பட்டிருக்கின்றனர். ஆனால் அவர்களை எல்லாம் கடந்து தப்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மாணவியை ஆசிரியர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதுபோன்று இந்த பயங்கர நிகழ்வு குறித்துக் தட்டப்பாறை போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து அந்த மாணவி 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, கடுமையான வெட்டுக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவியை அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய சோலையப்பனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், வரும் ஆகஸ்ட் மாதம் அந்த மாணவிக்கு 18 வயது ஆனதும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததாகவும், அதனால் தனக்குக் கிடைக்காதவர் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைத்து இப்படிச் செய்துவிட்டதாக சோலையப்பன் கூறியதாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரியா
இன்ஸ்டாவில் விஜய்: சமந்தா ரியாக்ஷன்!