சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் தனது தாய்க்கு சரியாக சிசிக்சை அளிக்கவில்லை என கூறி மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞருக்கு இன்று (டிசம்பர் 17) ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 13ம் தேதி சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி மீது விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். பொதுமக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விக்னேஷ் போலீசாரிடம் கூறுகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் தனது தாய்க்கு மருத்துவர் பாலாஜியிடம் சிகிச்சை பெற அழைத்து சென்றேன். என் தாய்க்கு கீமோ சிகிச்சை அளித்து வந்த நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த போது, உடல் நிலை தேறியது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஒவ்வொரு முறையும் 20 ஆயிரம் வரை செலவானது. இது குறித்து, பாலாஜியிடம் கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் என்னை திட்டி கீழே தள்ளினார். அந்த ஆத்திரத்தில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து குத்தினேன் என்று கூறியிருந்தார்.
மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விக்னேஷ் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு இன்று( டிசம்பர் 17) நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
விக்னேஷ் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காத காரணத்தினால், ஏற்பட்ட கோபம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. நோயாளிக்கு சரியான சிகிச்சை அளித்திருந்தால், இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது என்று வாதிட்டார்.
நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, சரியான சிகிச்சை அளிக்காத மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? என்ற கேள்வியை போலீசாரிடத்தில் எழுப்பினார். போலீசார் மவுனமாக இருந்தனர். பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து, நீதிபதி விக்னேசுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
வேலூர் சத்துவாச்சாரியில் தங்கி தினமும் காலையில் அங்குள்ள காவல் நிலையத்தில் மறு உத்தரவு வரும் வரை கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்