செல்ஃபியால் பறிபோன இளைஞரின் உயிர்!

தமிழகம்

காட்டு யானைகளுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் சுற்றி திரிந்துள்ளது. இந்த யானைகள் நேற்று (மார்ச் 13) இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்தன. காட்டு யானைகளின் நடமாட்டம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாரூர் அருகே காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்த எல்லப்பன் என்பவரது மகன் ராம்குமார்(27) அப்பகுதியில் உள்ள சாய்பாபா கோவில் பூசாரியாக இருந்துள்ளார். அவர் இன்று (மார்ச் 14) காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக மோட்டுப்பட்டி அருகே உள்ள மலையடிவாரத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது மலையடிவாரத்தில் சுற்றித் திரிந்த 2 காட்டுயானைகளை பார்த்த ராம்குமார், அவற்றை புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் அந்த யானைகளுடன் செல்ஃபி எடுக்கவும் முயற்சித்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக காட்டுயானைகள் ராம்குமாரை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ராம்குமார் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். காவல்துறையினர் ராம்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மோட்டுப்பட்டி மலையடிவாரத்தில் இருந்து வந்து அகரம் மருதேரி ஏரியில் நீரில் இறங்கிய 2 காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து விரட்டினர்.
அப்போது சப்பாணிப்பட்டி அருகே தருமபுரி – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து பாலக்கோடு வனப்பகுதிக்கு யானைகள் சென்றன.

சாலையைக் கடக்கும் போது யானைகள் அந்த வழியாக வந்த கார் ஒன்றை தும்பிக்கையால் தாக்கியுள்ளது. இதில் காரின் பக்கவாட்டில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் காரில் பயணித்தவர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை.

யானைகள் பாலக்கோடு வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால், பாலக்கோடு, காவேரிப்பட்டணம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என்றும், யானைகள் நடமாட்டம் குறித்துத் தகவலறிந்தால் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்குமாறும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைவிடுத்து பொதுமக்களே யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபடுவது, கல் வீசுவது, செல்பி எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மோனிஷா

தொடரும் தற்கொலைகள்: சென்னை ஐஐடி விளக்கம்!

சுங்கச்சாவடியில் வைத்து எச்.ராஜா திடீர் கைது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.