அனுமதி இல்லாமல் ஆடியோ நாவல்… யூடியூப் சேனல் முடக்கம்… ராஜேஷ்குமார் வார்னிங்!

Published On:

| By Selvam

தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் ராஜேஷ்குமார். இவரது க்ரைம் நாவல்களுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிய வாசகர் வட்டமே இருக்கிறது. தற்போது இவரது நாவல்கள் ஆடியோ வடிவில் இணையத்தில் கிடைக்கிறது. இந்தநிலையில், தன்னுடைய நாவல்களை முறையான அனுமதி இல்லாமல் ஆடியோ வடிவில் யூடியூபில் பதிவேற்றம் செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜேஷ்குமார் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” கடந்த சில ஆண்டுகளாகவே என்னிடம் முறையான அனுமதி பெறாமல், சிறிதும் குற்ற உணர்ச்சி இல்லாமல், மனசாட்சி இல்லாமல் என்னுடைய பல நாவல்களை ஆடியோ நாவல்களாக மாற்றி ப(க)டித்து குதறிச் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள் சில யூட்யூபர்கள்.

என் நாவல்களில் இருக்கும் க்ரைமை விட இவர்கள் தமிழ் உச்சரிப்பில் செய்யும் க்ரைமுக்கு என்ன தண்டனை வேண்டுமென்றாலும் தரலாம்.

அதை கேட்கும்போது முதலில் காதும், பிறகு மனமும் ரணமாகிறது. இந்த விதிமீறல்களை சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயன்று அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினால் சாஷ்டாங்கமாக சரணடைந்து மன்னிப்பு கேட்டு விட்டு அடுத்த மாதமே வேறு ஒரு சேனல் பெயரில் அதே நாவல்களை என் பெயரைச் சொல்லாமல் தலைப்பை மாற்றி படிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

சிலர் ராஜேஷ்குமாரை ராகேஷ்குமாராக மாற்ற முயன்று கொண்டையைக் காட்டி விடுகிறார்கள். இன்னும் சிலர் புத்திசாலித்தனம் என்று நினைத்துக்கொண்டு இரண்டு மூன்று நாவல்களை மிக்ஸியில் அடித்து நம்மை குழப்பப் பார்க்கிறார்கள்.

யூட்யூப்பில் காப்பிரைட் ஸ்ட்ரைக் ஆப்ஷனை பயன்படுத்தி வாரத்திற்கு 20 யூட்யூப் லிங்குகளை முடக்கிக் கொண்டிருக்கிறேன். என்னிடம் முறையாக அனுமதி பெற்ற சில செயலிகள் ஸ்டோரிடெல், குக்கூ ஃஎப்எம், ரேடியோ ரூம் நல்ல தமிழ் உச்சரிப்புடன் குரல் வளம் உள்ள வாய்ஸ் ஓவர் கலைஞர்கள் தேர்ந்தெடுத்து ஆடியோ நாவல்களை வெளியிடுகிறார்கள். என்னிடம் அனுமதி கேட்ட டீப்டாக்ஸ், வாசிப்பு, தமிழ் ரேடியோ, நாவல் கதைகள், ஸ்டோரி வேர்ல்ட் தமிழ் ஆகிய 5 யூட்யூபர்களுக்கு மட்டும்தான் வாய்ப்பு கொடுத்திருக்கிறேன்.

இனிமேல் மேற்கண்ட 5 யூட்யூபர்கள் தவிர வேறு ஏதாவது யூட்யூப் தளத்தில் என்னுடைய ஆடியோ நாவல்களை பார்க்க நேர்ந்தால் எங்களது ஆர்.கே. பப்ளிஷிங்கின் வாட்ஸப் எண்ணான 8925116783ற்கு அந்த போலி யூட்யூபர்ஸ் லிங்க்குகளை அனுப்பி வையுங்கள். அவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை காத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழர்கள் பகுதியிலும் வென்ற அதிபர் A.K.D… இனி இலங்கை எப்படி இருக்கும்? – எச்சரிக்கும் வைகோ

“எங்கள் நாடு” : கனடாவை சொந்தம் கொண்டாடும் காலிஸ்தான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share