மழையால் நனைந்த புத்தகங்களைப் பாதுகாக்கப் போராடிக்கொண்டிருக்கிறோம் என்று எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் சென்னையில் பல்வேறு தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. இதில் எழுத்தாளர்களின் புத்தகங்களும் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், மழையால் நனைந்த ஈரமான புத்தகங்களுக்கு நடுவே கண் கலங்கி அமர்ந்திருக்கிறேன் என்று உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.
அதுபோன்று எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனும் ஒரு பதிவைத் தனது முகநூல் பக்கத்தில் டிசம்பர் 6ஆம் தேதி வெளியிட்டுள்ளார்.
அதில், “நான்கு நாட்களாக எங்கும் செல்ல முடியவில்லை. புத்தகங்கள் நனைந்து அவற்றைப் பாதுகாக்கப் போராடிக்கொண்டிருக்கிறோம். இருபது வருஷங்களாக ஒவ்வொரு மழைக்காலத்திலும் இப்படித்தான் அல்லல்படுகிறோம். செல்வி மிகவும் களைத்துவிட்டாள். ‘ இதெல்லாம் வேண்டாம் விட்ரு..’ என மனம் கசந்து சொல்ல ஆரம்பித்திருக்கிறாள்.
நூலகம் என்ன நிலையில் இருக்கிறது என்ற கவலை மற்றொருபுறம். ஏற்கனவே அங்கே பல பிரச்சினைகள். போய் என்னவென்று பார்க்கவேண்டும். ஓட்டுநர் இன்றாவது வருகிறாரா தெரியவில்லை.
நகரின் தாழ்வான பகுதிகளில் மக்கள் இன்னும் வெள்ளத்தில் சிக்கியிருக்கிறார்கள். அரசு போராடிக்கொண்டிருக்கிறது. அங்கெல்லாம் தண்ணீர் இன்னும் வடியாததால் மின்சாரம் இன்றி தொலை தொடர்பும் இல்லை. நண்பர்கள் பலரும் அங்கிருக்கிறார்கள். மிகவும் சஞ்சலமாக இருக்கிறது.
மனதில் இன்னும் என்னென்னவோ சங்கடங்கள். தீரவே தீராத கஷ்டங்கள். எதனோடெல்லாம் போராடுவது.? கடந்த ஐந்து வருடங்களில் மூன்று வருடங்கள் என் இருதய அறுவை சிகிச்சையும் தொடர்ந்துவந்த கொரோனா முடக்கமும் எங்கள் பொருளாதார அடித்தளங்களைத் தகர்த்துவிட்டது.
அதிலிருந்து இன்னும் மீண்டுவரமுடியவில்லை. ஒரு இஞ்ச்கூட முன்னேற முடியாத ஒரு தொழில். கைதூக்கிவிட யாருமில்லை. இருக்க சொந்தமாய் ஒரு இடமில்லை.
புயல் நகர்ந்துவிட்டது. ஆனால் மனதில் ஆழத்தில் கடுமையான டிப்ரஷன் உருவாகிக்கொண்டிருக்கிறது. அது என்னை ஆட்கொண்டுவிடாமல் கடுமையாக போராடுகிறேன். இதற்கு முன் அப்படி ஆட்கொண்ட காலங்களில் மீள்வது எளிதாக இருக்கவில்லை.
வாழ்வின் மிகக்கடுமையான காலம். இந்த எழுத்தைத் தவிர் என்னிடம் ஒன்றுமே இல்லை” என்று வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“மழையால் சேதமடைந்த புத்தகங்கள்” : எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உருக்கம்!
Comments are closed.