அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடைபெற்றுள்ளதாக இன்று (ஆகஸ்ட் 10) உயர்நீதிமன்றம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை நடத்த இருப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த 1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார்.
அப்போது, அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.36 கோடி சொத்துகுவித்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது புகார் எழுந்தது.
இதனையடுத்து கடந்த 2002 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குபதிவு செய்தது. ஆரம்பத்தில் இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. பின்னர் வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக 172 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 28 ஆம் தேதி போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுவித்து வேலூர் நீதிமன்ற நீதிபதி வசந்த லீலா உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் இதுவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை.
இந்த நிலையில், மாவட்ட நீதிமன்றங்கள் அளித்த உத்தரவுகள் சரியா என்பதை ஆய்வு செய்யும் அதிகாரத்தின் அடிப்படையில் இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் எம். பி, எம். எல். ஏக்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து எடுத்துக்கொண்டார்.
இந்த வழக்கு இன்று விசாராணைக்கு வந்தபோது,
”பொன்முடி மற்றும் அவரது மனைவி விடுதலை செய்யப்பட்ட வழக்கினை ஏன் தாமாக முன்வந்து எடுத்துக்கொண்டேன் என்பதை 17 பக்க உத்தரவில் தெரிவித்துள்ளேன்.
இதுவரை நான் பார்த்ததிலேயே மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்ட வழக்கு இது தான்.
இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி, லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கினை வரும் செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும், தான் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும் என்று பதிவாளருக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஜெயலலிதா புடவையை இழுத்தவர்கள் திரெளபதி பற்றி பேசுகின்றனர்: நிர்மலா சீதாராமன்
சிறுமியை முட்டி தள்ளிய மாடு: உரிமையாளர் மீது வழக்குப் பதிவு!
எய்ம்ஸ் மருத்துவமனை: மக்களவையில் அனல் பறந்த விவாதம்!