உலக பட்டினி தினம் : மூன்றரை லட்சம் பேருக்கு விஜய் கட்சி அன்னதானம்!

Published On:

| By Kavi

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் மே 28 ஆம் தேதி உலகப் பட்டினி தினம் கடைபிடிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை உலக நாடுகள் சரிசெய்ய வலியுறுத்தியும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாட்டில் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் அன்னதானம் வழங்க தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டார்.

மாவட்ட அணி, நகரம், ஒன்றியம், கிளை மற்றும் சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றிப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்று தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

உலக பட்டினி தினத்தையொட்டி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று மூன்றரை லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.

ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்” என கூறினார்.

சீமானுடன் கூட்டணி தொடர்பான கேள்விக்கு, “ எந்த முடிவாக இருந்தாலும் கட்சியின் தலைவர் விஜய் ஆலோசித்து முடிவெடுப்பார்” என்று தெரிவித்தார்.

சென்னையில் அன்னதானத்தை புஸ்ஸி ஆனந்த் தொடங்கி வைத்ததை தொடர்ந்து 234 தொகுதிகளிலும் ஏழை எளிய மக்கள், தூய்மை பணியாளர்கள், சாலையில் வசிப்பவர்களுக்கு தவெக நிர்வாகிகள் உணவு வழங்கினர்.

திருச்சி மாவட்டத்தில் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் பெருவளப்பூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள உழவர் சந்தை பகுதியில்,தூய்மை பணியாளர்கள், விவசாயிகள், காய்கறி வியாபாரிகள், ஓட்டுனர்கள் ஆகியோருக்கு உணவு வழங்கப்பட்டது.

இதேபோல, பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட போத்தனூர், வெள்ளலூர், ஏலூர், மதுக்கரை மார்க்கெட், பொள்ளாச்சி, கிணத்துகடவு பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் 200க்கும் மேற்பட்டோருக்கு தவெக நிர்வாகிகள் அன்னதானம் வழங்கினர்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

யார் பிரதமர் வேட்பாளர்? டெல்லி செல்லும் ஸ்டாலின்

மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் சூப்பர் ஸ்டாரின் ’படையப்பா’ – எப்போ தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel