உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணின் வறுமைக் கதையை கேட்டு திருடிய 13 சவரன் நகையை திருடன் திருப்பி கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதா. இவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
சுதாவுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். சுதா கூலி வேலை செய்து ஆடுகளை வளர்த்தும் தனது பிள்ளைகளை வளர்த்து வந்துள்ளார்.
வழக்கம் போல சுதா காலையில் தனது கூரை வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்குச் சென்றுள்ளார். பின்னர் ஆடுகளை மேய்ப்பதற்காக வீட்டிலிருந்து சென்றுள்ளார். மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சுதா. திருநாவலூர் போலீசார் சுதா வீட்டிற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த பதிமூன்றரை சவரன் நகை வீட்டின் பின்புறமாக வந்து கூரையைப் பிரித்து உள்ளே சென்று திருடப்பட்டது தெரியவந்தது.
சுதா தன் பெண் பிள்ளைகள் படிப்பிற்காகவும், அவர்களின் திருமணத்திற்காகவும் கூலி வேலை செய்து ஆடுகள் வளர்த்து, அதில் வந்த பணத்தை வைத்து திருமணத்திற்காக நகை வாங்கி வைத்துள்ளதாக கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
இதை அறிந்த திருடன், திருடிய 13 சவரன் நகையை ஆட்டுக்கொட்டகையில் வீசிவிட்டு செலவுக்காக அரை பவுனை மட்டும் எடுத்துச் சென்றுள்ளான்.
வழக்கம்போல் காலையில் எழுந்த சுதா ஆட்டுக்கொட்டகைக்குச் சென்றபோது நகை கிடந்ததை கண்டு அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தார்.
பெண்ணின் நிலைமையைக் கண்டு பரிதாபப்பட்ட திருடன், நகையை திருப்பிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலை.ரா
அண்ணாமலை வாட்ச்: வரிந்துகட்டும் திமுக
போராடிய மொராக்கோ..பந்தாடிய குரோஷியா!