டாஸ்மாக் வேணும்னு சொல்ல வெச்சாங்க?: தருமபுரியில் திடீர் ட்விஸ்ட்!

Published On:

| By Kavi

தருமபுரியில் டாஸ்மாக் கடை திறக்க கோரி பெண்கள் வலியுறுத்திய நிலையில் அதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் வேண்டும் என்று எங்களை சொல்ல சொன்னதால் அப்படி சொன்னோம் என்று  பெண்கள் பேட்டி அளித்துள்ளனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.

பல்வேறு இடங்களில் பெண்களும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். கடந்த 11ஆம் தேதி தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவா் கிருஷ்ணசாமி, “மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைப்போம் என்ற தோ்தல் வாக்குறுதிக்கு மாறாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது” என்று விமர்சித்திருந்தார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

இப்படி டாஸ்மாக்கிற்கு எதிராக பலரும் பேசி வரும் நிலையில், தருமபுரியில் பெண்கள் டாஸ்மாக் வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டது பேசு பொருளானது.

அன்புமணி ராமதாஸ் எம்.பி.யாக இருந்த தருமபுரி மாவட்டத்தில் உள்ள நலப்பரம்பட்டி, கெட்டூர், பலஞ்சர அள்ளி, ஆதனூர், நல்லாம்பட்டி, வண்ணாத்திப்பட்டி ஆகிய 7 கிராம மக்கள் தங்கள் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்று நேற்று(ஆகஸ்ட் 12) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என பலர் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெண் ஒருவர், “வீட்டில் இருக்கும் ஆண்கள் குடிக்க போனால் அவர்களை தேட முடிவதில்லை. பக்கத்தில் குடிக்க போனால் அவர்களை தேடி வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவோம். எனவே எங்கள் பகுதியில் மதுக்கடைகள் வேண்டும்” என்று கூறினார்.

முதியவர் ஒருவர் கூறுகையில், “எனக்கு 90 வயசு, இந்த வயசுல நான் சாப்டனும்… சாப்டறதுக்கு எங்க ஊர்ல 2000 பேர் இருக்காங்க’ என்று சொல்ல

மற்றொரு ஆண், “வெகுதூரத்தில் டாஸ்மாக் கடைகள் இருப்பதால் சென்று வரும் போது விபத்து ஏற்படுகிறது. போதையில் குடித்துவிட்டு வீட்டுக்கு வரமுடிவதில்லை. கணவன்மார்கள் வீட்டுக்கு தாமதமாக வருவதால் பெண்களுக்கு கவலை. அதனால் தான் பக்கமாக டாஸ்மாக் கடை வைத்து தர கோருகிறோம்” என்று கூறினார்.

டாஸ்மாக் கேட்டு  இவர்கள் போராடியது வினோதத்தை ஏற்படுத்தியதோடு பேசுபொருளானது.

இந்தநிலையில் நேற்று பேட்டி அளித்த அந்த பெண் மீண்டும் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மீட்டிங்கினு சொல்லி போனோம்ங்க. அங்க மாத்தி இப்படி பேச சொன்னாங்க. எங்கள கடை வேணும்னு சொல்ல சொன்னாங்க.

நாங்க இதுவர மீட்டிங் போனதில்லை. இப்பதான் ஃப்ர்ஸ்ட். எங்கள கடை வேண்ம்னு பேச சொல்லி 100 ரூபாய் கொடுத்தாங்க. இப்படி பேசுனதால எங்கள எல்லாம் திட்றாங்க. எங்களுக்கு கடை வேணாம்” என்று தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் நடந்த இந்த சம்பவம் தற்போது பேசு பொருளாகியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ரூ.525 கோடி நிதி மோசடி… பாஜக கூட்டணி தலைவர் தேவநாதன் கைது!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share