மகளிர் தினம் : 2024ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருது யாருக்கு?

தமிழகம்

இலக்கியத் துறையில் சிறப்பாக தொண்டாற்றி வரும் பாஸ்டினா சூசைராஜ் (எ) பாமாவுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருதினை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், இலக்கியத்தின் மூலமாக தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூக தொண்டாற்றி வரும் பாஸ்டினா சூசைராஜ் (எ) பாமாவுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை வழங்கப்பட உள்ளது.

பெண்களுக்காக கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம், மகளிர் உரிமை. மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தமிழுக்கான சேவை, கலை, இலக்கியம், அறிவியல், பத்திரிகை மற்றும் நிருவாகம் ஆகிய பல்வேறு துறைகளில் முன்மாதிரியாக தொண்டாற்றிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 2012 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் “ஔவையார் விருது” வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

Image

அவ்வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் 2024-ஆண்டிற்கான ஔவையார் விருதினை இலக்கியத்தின் மூலமாக தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூக தொண்டாற்றி வரும், முன்னணி எழுத்தாளரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்டினா சூசைராஜ் (எ) பாமாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

யார் இந்த பாமா?

விருதுநகரை சேர்ந்த ஃபாஸ்டினா மேரி ஃபாத்திமா ராணி என்ற பாமா 1958ம் ஆண்டு ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவர்.  இவர் பள்ளி ஆசிரியையாக பணியாற்றியவர். பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்தார். ஏழு ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக இருந்தார். பெண்களின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் குரல் கொடுக்கும் ஃபாஸ்டினா ’பாமா’ என்கிற புனைப்பெயரில் எழுதி வருகிறார்.

ஒரு தலித் பெண்ணாக தன்னுடைய அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இவர் எழுதிய ‘கருக்கு’ (1992) எனப்படும் மிகப் பிரபலமான நாவல் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தனது புத்தகத்தின் வாயிலாக தலித் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்த பாமா, சமூகக் கட்டமைப்புகளின் பிற்போக்குத்தனத்தை தன்னுடைய படைப்பின் மூலமாக விமர்சித்ததால் தனது கிராமத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.

படித்து முடித்து ஏழு ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக பயிற்சி மேற்கொண்ட பாமா, அங்கு மோசமான அடிப்படை வசதிகளற்று இருந்த நிலையைக் கண்டு,  அதிலிருந்து வெளிவந்து எழுதத் தொடங்கினார்.

கருக்கு தவிர்த்து ‘சங்கதி’, ‘வன்மம்’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளுடன் ‘குசும்புகாரன்’ மற்றும் ‘ஒரு தாத்தாவும் எருமையும்‘ ஆகிய இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார் பாமா.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மகளிர் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை அணி : விஜய் புதிய அறிவிப்பு!

டிஜிட்டல் திண்ணை: ஒரு சீட்டுக்கு ஒ.கே.சொன்ன வைகோ… 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? துரை வைகோவிடம் பேசியது யார்?

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *