அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து: மெட்ரோ பணியால் நிகழ்ந்த விபத்து!
சென்னை வடபழனியில் மெட்ரோ ரயில் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் மோதி மாநகரப் பேருந்து அப்பளம் போல் நொறுங்கியது.
வடபழனி ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று(டிசம்பர் 2) அதிகாலை 5மணி அளவில் வணிக வளாகம் முன்பு சாலையின் நடுவே ராட்சத தூண்கள் அமைப்பதற்காக கிரேன் உதவியுடன் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது.
அப்போது அவ்வழியே கோயம்பேடு நோக்கி வந்த மாநகர பேருந்து (எண் 159ஏபி) மீது எதிர்பாராத விதமாக கிரேன் மோதியது.
இதில் பேருந்தின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போல உடைந்து நொறுங்கியது. இதில் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் பழனி லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அதிகாலை நேரம் என்பதால் பேருந்தில் பயணிகள் யாரும் இல்லை. மேலும் வடபழனி டெப்போவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்து ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தகவல் அறிந்து வந்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமாநில தொழிலாளி ஒருவர் தூக்க கலக்கத்தில் கிரேனை இயக்கியதால் விபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கலை.ரா
திகட்டாத அழகு.. நச் போஸ் கொடுத்த தமன்னா.. தவிக்கும் ரசிகர்கள்..
உலகக்கோப்பை கால்பந்து: வெளியேறியது ஜெர்மனி