ஒரு தலை காதல், திருமணம் செய்துகொள்ள மறுப்பு, காதலைச் சொன்னால் ஏற்க மறுப்பு உள்ளிட்ட காரணங்களால் பொது இடங்களில் இளம்பெண்கள் கொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
பெண்களுக்கு என எந்த விருப்பு வெறுப்பு இன்றி காதலைச் சொன்னால் ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லை என்றால் பின் தொடர்ந்து தொந்தரவு செய்வது, கொலை செய்வது போன்ற செயல்கள் தொடர்கதையாகி வருகிறது.
காரைக்கால் வினோதினி தொடங்கி பரங்கிமலை சத்யா வரை ஒருதலை காதலால் கொலை செய்யப்பட்ட பெண்களின் பட்டியல் நீள்கிறது.
காரைக்கால் வினோதினி
காரைக்காலைச் சேர்ந்தவர் ஜெயபால் மகள் வினோதினி. பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இவர் சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவரை திரு வேட்டக்குடியில் கட்டட உபகரணங்களை வாடகை விடும் தொழில் செய்து வந்த சுரேஷ்குமார், ஒருதலையாகக் காதலித்து, திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். ஆனால் வினோதினி இதை ஏற்கவில்லை.
இந்நிலையில் 2012 நவம்பர் 14ஆம் தேதி இரவு 10 மணியளவில், தீபாவளியைக் கொண்டாடி விட்டு சென்னைக்குச் செல்ல காரைக்கால் பேருந்து நிலையத்துக்கு வந்த வினோதினி மீது ஆசிட் வீசினார் சுரேஷ்குமார்.
இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வினோதினி 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி உயிரிழந்தார்.
நுங்கம்பாக்கம் சுவாதி
2016ல் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் நெல்லை மாவட்டம், மீனாட்சி புரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ராம்குமார் கைது செய்யப்பட்டார்.
சுவாதியை ராம்குமார் பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாகக் கூறி தொல்லை கொடுத்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே கொலை செய்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது வரை இவ்வழக்கில் இருக்கும் மர்மம் விலகவில்லை.
விழுப்புரம் நவீனா
விவசாயம் படித்து விவசாயிகளுக்காக பணியாற்ற வேண்டும் என்ற ஆசையுடன் படித்து வந்த விழுப்புரம் வி.பாளையத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி நவீனா, சுவாதி கொலை செய்யப்பட்ட சில நாட்களில் கொலை செய்யப்பட்டார்.
நவீனாவை காதலிக்கச் சொல்லி வற்புறுத்தி வந்த மாம்பழப்பட்டு சாலை இந்திரா காலனியைச் சேர்ந்த முருகன், நவீனாவின் பெற்றோர்கள் வெளியில் சென்றிருந்த போது அவரது வீட்டுக்குச் சென்று தீயிட்டு கொலை செய்தார்.
தன் மீதும், நவீனா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த நிலையில் இருவருமே உடல் கருகி உயிரிழந்தனர்.
கரூர் சோனாலி
2016ல் கரூர் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு சிவில் பாடம் படித்து வந்தார் மாணவி சோனாலி. மதுரை மாவட்டம், மானகிரியைச் சோ்ந்தவர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகிலுள்ள வெங்கனூா் ஆதினேந்தல் பகுதியைச் சேர்ந்த உதயகுமாரும் இதே கல்லூரியில் பயின்று வந்தார்.
இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், உதயகுமார் நடவடிக்கை பிடிக்காத காரணத்தால் அவரிடம் இருந்து சோனாலி பிரிந்து சென்றதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், கல்லூரியின் வகுப்பறையில் வைத்தே சோனாலியை உதயகுமார் கட்டையால் அடித்து கொலை செய்தார்.
தூத்துக்குடி பிரான்சின்னா
தூத்துக்குடி ஜார்ஜ்ரோடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஆசிரியை பிரான்சின்னா.
தூத்துக்குடி லயன்ஸ்டவுனைச் சேர்ந்த கீகன்ஜோஸ் இரண்டு ஆண்டுகளாக பிரான்சின்னாவை ஒருதலை பட்சமாகக் காதலித்து வந்தார்.
இந்நிலையில் பிரான்சின்னாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதை அறிந்த கீகன்ஜோஸ் 2017 ஆகஸ்ட் 31ஆம் தேதி சர்ச்சுக்கு சென்ற பிரான்சினாவை அங்கேயே வைத்து கொடூரமாகக் கொலை செய்தார். பின்னர் கொலையாளியான கீகன்ஜோஸும் தற்கொலை செய்துகொண்டார்.
குமரி மெர்ஸி
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த வேலிமலை கிராமத்தைச் சேர்ந்தவர் மெர்சி. நெல்லை வள்ளியூரில் உள்ள தனியார் துணிக்கடையில் பணியாற்றி வந்தார்.
இவரை அதே துணிக்கடையில் பணியாற்றிய ரவீந்திரன் காதலிக்குமாறு வற்புறுத்தி வந்தார். ஆனால் அதை மெர்ஸி ஏற்க மறுத்ததால் துணிக்கடை முன்பே 2018 நவம்பர் மாதம் கொடூரமாக வெட்டி கொலை செய்தார்.
வேளச்சேரி இந்துஜா
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் இந்துஜா. இவரைப் பள்ளி நண்பரான ஆகாஷ் ஒருதலையாகக் காதலித்து வந்திருக்கிறார்.
தன் காதலை இந்துஜா ஏற்காததால் ஆத்திரமடைந்த ஆகாஷ் 2017 நவம்பர் மாதம் இந்துஜா வீட்டுக்கு பெட்ரோல் கேனுடன் சென்று தீயிட்டு கொளுத்தி கொலை செய்தார்.
சென்னை சுவேதா
சென்னை கிற்ஸ்டியன் கல்லூரியில் படித்து வந்த 20 வயதான சுவேதா என்ற இளம்பெண்ணை, செங்கல்பட்டில் உள்ள கார் பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ராமச்சந்திரன் பின் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் 2021 செப்டம்பர் மாதம் தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து சுவேதாவை கழுத்தறுத்து ராமச்சந்திரன் கொலை செய்தார்.
வினோதினி, சுவாதி, பிரான்சினா, நவீனா, சோனாலி, மெர்ஸி, இந்துஜா, சுவேதா ஆகிய இளம் பெண்களின் வரிசையில் தற்போது பரங்கிமலை சத்யாவும் கொலை செய்யப்பட்டிருப்பது பெண் பிள்ளை பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகள் பள்ளி கல்லூரி, சர்ச், வேலை செய்யும் இடம், பொது இடம் என அனைத்து இடங்களிலும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலையே நிலவுகிறது என்பதை உணர்த்துகிறது.
சில இளைஞர்கள் காதல் தோல்வியைச் சந்திக்கும் போது இதுபோன்ற வன்முறையைக் கையில் எடுக்காமல், நான் விரும்பினால் நீயும் விரும்பித்தான் ஆக வேண்டும் என்று மனநிலையிலிருந்து மாறினால் பெண்கள் ஒருதலை காதலுக்கு பலியாவது தவிர்க்கப்படும்.
பிரியா
மாஜி அமைச்சர் வீட்டுக்கு சென்றது ஏன்? நடிகை சாந்தினி பேட்டி
மின்கட்டண உயர்வு: தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!