சென்னையில் பழைய கட்டடம் இடிந்து விழுந்து பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா சாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே பயன்படுத்தாமல் இருந்த இரண்டு பழைய கட்டடங்களை இடிக்கும் பணியானது கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்துள்ளது.
நேற்று இரவு முதல் ஜேசிபி இயந்திரத்தை வைத்து இடிக்கும் பணியில் கட்டடத்தின் உரிமையாளர் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில் இன்று காலை கட்டடத்தை இடிக்கும் பணியின் போது அந்த வழியாக நடந்து சென்ற மதுரையை சேர்ந்த பிரியா மற்றும் இளைஞர் ஒருவர் மீது கட்டடத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்துள்ளது.
இதில் பிரியா மற்றும் இளைஞர் கட்டட இடிபாடுகளில் சிக்கினர். உடனடியாக ஆயிரம் விளக்கு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு, கட்டட இடிபாடுகளில் சிக்கிய இருவரையும் மீட்டு, ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த பிரியா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் லேசான காயத்துடன் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் பலியான மதுரையைச் சேர்ந்த பிரியா, ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், கட்டட உரிமையாளர் மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெறாமல் கட்டட இடிப்பு பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கட்டட உரிமையாளரை தேடி வருகின்றனர்.
சென்னையில் காலையில் நடந்த இந்த விபத்தால் அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
செல்வம்
அரோகரா… அரோகரா… : 16 ஆண்டுகளுக்கு பிறகு பழனியில் குடமுழுக்கு!
முக்கால் மணி நேரம் விமானத்திலேயே வட்டமடித்த தமிழிசை