வெள்ளத்தில் வீட்டை இழந்து கையில் குழந்தையுடன் கதறியழுத பெண்ணிற்கு கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டித் தரப்படும் என அமைச்சர் சி.வி. கணேசன் இன்று (டிசம்பர் 4) உறுதியளித்தார்.
ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழை பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது. சாத்தனூர் அணை திறக்கப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக சேதமடைந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நெல்லிக்குப்பம், முள்ளிக்கிராம்பட்டு பகுதியில் தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவிகள் வழங்கினார்.
அப்போது புயல் மற்றும் வெள்ளத்தால் வீடு இடிந்து விழுந்துவிட்டதாக கூறி கைக்குழந்தையுடன் முள்ளிக்கிராம்பட்டைச் சேர்ந்த ஒரு தாய் கதறி அழுதார்.
அந்த பெண்மணியின் கண்ணீரை துடைத்த அமைச்சர் சி.வி.கணேசன், “முதல்வர் தான் என்னை அனுப்பி வைத்துள்ளார். அண்ணன் சொல்றேன் அழக்கூடாது. வெள்ளத்தால் தரைமட்டமான வீடுகளுக்கு பதிலாக கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டித் தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இங்கு வீடுகளை இழந்த அனைவருக்கும் புதிய வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.
மேலும் அந்த பெண்மணி கேட்டுக்கொண்டதற்கிணங்க, பெண் குழந்தைக்கு ’மணிமேகலை’ என்று அமைச்சர் சி.வி.கணேசன் பெயரிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்..
கிறிஸ்டோபர் ஜெமா
இடைத்தேர்தல் போல வெள்ள நிவாரண பணி: திமுகவோடு மீண்டும் உரசும் ஆதவ் அர்ஜுனா
சிபில் ஸ்கோரில் வெளிப்படைத்தன்மை இல்லை : கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!