தமிழக காவல்துறையில் பணியாற்றும், பெண் காவல் உதவியாளர் ஒருவர், தான் பணிபுரியும் காவல் நிலையத்திலேயே தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி உட்கோட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் சுகன்யா. இவர் 2016பேட்ச்சை சேர்ந்தவர்.
இவரை விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகில் உள்ள கொல்லியாங்குளம் காவலர் பயிற்சி பள்ளிக்கு பயிற்சியாளராக இடமாறுதல் செய்து மே 31ஆம் தேதி உத்தரவிட்டார் கடலூர் மாவட்ட எஸ்.பி. ராஜாராம்.
மறுநாளே(ஜூன் 1) எஸ்.பி.ராஜாராமை சந்தித்த சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா தனது குறைகளை சொல்லியுள்ளார். மீண்டும் ஜூன் 3ஆம் தேதி எஸ். பி. யை சந்தித்த சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா,
“எங்கள் காவல் நிலைய எல்லைக்குள் கஞ்சா, சாராயம், குட்கா அதிகமாக விற்பனையாகிறது. அவற்றை நான் தடுப்பதால் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தனிப் பிரிவு ஏட்டு ஆகியோர் என்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். அதனால் எனக்கு போடப்பட்ட இடமாறுதல் உத்தரவை ரத்து செய்து மீண்டும் என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கே டூட்டி போடுங்கள்” என்று கேட்டுள்ளார் சுகன்யா.
அதிகாரிகள் உத்தரவை அலட்சியப்படுத்தக் கூடாது என்று எஸ். ஐ. சுகன்யாவை எச்சரித்த எஸ்.பி.ராஜாராம்… பண்ருட்டி டிஎஸ்பி, நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ஆகியோரைத் தொடர்புகொண்டு எஸ்.ஐ.சுகன்யாவை உடனடியாக ரிலீவ் செய்ய அறிவுறுத்தினார்.
இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் சுகன்யாவை ஜூன் 4ஆம் தேதி இரவு ரிலீவாக உத்தரவிட்டார். ஆனால் அதையும் ஏற்காத சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா இன்று (ஜூன் 5)காலை 9மணியளவில் வழக்கமாக நெல்லிக்குப்பம் காவல் நிலையம் வந்தார்.
சுமார் 10மணியளவில் இன்ஸ்பெக்டர் சீனிவாசனைத் தொடர்புகொண்ட சுகன்யா, ‘சார் நான் நம்ம ஸ்டேஷன்ல இருந்துதான் பேசுறேன்’ என்று ஆரம்பித்திருக்கிறார். உடனே டென்ஷனான இன்ஸ்பெக்டர், ‘ஏம்மா…இன்னும் நீ ரிலீவ் ஆகலையா? எஸ்.பி.யே சொன்னாலும் கேக்க மாட்டியா?’ என்று கேட்க அப்போது சுகன்யா…. ‘ நான் ஒரேயடியா ரிலீவ் ஆகதான் சார் போறேன். நான் சாகுறதுக்கு மாத்திரைகளை விழுங்கிட்டேன்” என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.
பதறிப்போன இன்ஸ்பெக்டர், போலீஸ் ஸ்டேஷன் ரிசப்ஷன் பணியில் இருக்கும் பெண் போலீஸ் அஞ்சனாவைத் தொடர்புகொண்டு… அவருடன் இரண்டு போலீஸ் போட்டு போலீஸ் வாகனத்தில் சுகன்யாவை அறுபடை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா.
நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் விசாரித்தபோது, “எஸ்.ஐ. சுகன்யாவிடம் புகார் கொடுக்க வருபவர்களை அவமானப்படுத்தும் விதமாக ட்ரீட் செய்வதாக மேல் அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது. மேலும் சாராய வியாபாரிகள், கஞ்சா, மற்றும் குட்கா விற்பனையாளர்களை கைது செய்து சோதனை செய்யும்போது பல குளறுபடிகளை செய்திருக்கிறார் சுகன்யா. தவிர இவர் இரண்டு வருடமாக ஒரே ஸ்டேஷனில் வேலை பார்க்கிறார்” என்கிறார்கள்.
காவல் துறையில் தற்கொலை மிரட்டல் என்பது ஃபேஷன் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள் போலீஸாரே.
–வணங்காமுடி
கேரளா டூ தமிழ்நாடு : அரிசிக்கொம்பன் பிடிபட்ட கதை!
தி இந்து : வெளியேறும் மாலினி – புதிய தலைவராகும் நிர்மலா