கட்டபொம்மன் ஊர்வலத்தில் கலவரம்: பெண் எஸ்.ஐ காயம்!

தமிழகம்

கரூரில் கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி இன்று (ஜனவரி 3) அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் ஊர்வலம் சென்ற இளைஞர்களை தடுத்து நிறுத்திய பெண் எஸ்.ஐ மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சுதந்திர போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அரசியல் தலைவர்களாலும், பொதுமக்களாலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில், கரூரில் ஆண்டுதோறும் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் அவரது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

குறிப்பாக ஆண்டுதோறும் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு இருந்து தேவராட்டம் ஆடியபடி ஊர்வலமாக பேருந்துநிலையம் ரவுண்டானா பகுதியில் அவரது சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். இந்த ஆண்டும் போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர். அதேவேளையில் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

பேச்சுவார்த்தை தோல்வி

எனினும், இன்று காலை வழக்கம்போல் வீரபாண்டியர் பண்பாட்டுக்கழகத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் போக்குவரத்தை பாதிக்கும் விதமாக கரூர் தாலுகா அலுவலகம் முன்பாக ஊர்வலம் செல்ல அனுமதியை மீறி திரண்டனர்.

இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்த போலீசார் ஊர்வலமாக செல்ல முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய, போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் ஊர்வலம் செல்ல முயன்றனர். இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.

இதனால் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தை சேர்ந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

பெண் எஸ்.ஐ காயம்

இதற்கிடையில் கரூர் நகர காவல்நிலையத்தைச் சேர்ந்த பெண் உதவி காவல் ஆய்வாளர் பானுமதி இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி சாவியை பறித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பெண் எஸ்.ஐ பானுமதியின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பத்தை தொடர்ந்து கரூர் தாலுகா அலுவலகம் முதல் பேருந்து நிலையம் வரை 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். எனினும் அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

“இல்லம் தோறும் வள்ளுவர்” : முதல் சிலையை பெற்றுக்கொண்ட விஜய்சேதுபதி

தியேட்டர்களில் வெளி உணவு வழக்கு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.