‘கர்ப்பிணியா இருக்கேனு கெஞ்சியும் அவன் விடல’ – ரயிலில் நடந்த பதைபதைக்கும் சம்பவம்!

Published On:

| By Kumaresan M

வேலூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று (பிப்ரவரி 7) 36 வயது கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஹேமந்த்ராஜ் என்பவன் அந்த பெண்ணை கே.வி. குப்பம் அருகே ரயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளான்.

இதில், அந்த பெண் கை கால்களில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஹேமந்த்ராஜ், பெண்களுக்கு எதிராக 3 முறை குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளான்.

இதற்கிடையே, சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீரோடு விவரிக்கும் வீடியோ வெளியாகி பதற வைத்துள்ளது.

அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது , “நான், திருப்பூரில் பெண்கள் பெட்டியில் ஏறினேன். ஜோலார்பேட்டை வந்த போது பெட்டியில் இருந்த மற்ற பெண்கள் இறங்கிட்டாங்க. அங்கிருந்து ரயில் புறப்பட்ட சமயத்தில் இவன் வந்து ஏறிட்டான். ரயில் புறப்பட்டு விட்டது. அடுத்த ஸ்டாப்பில் இறங்கி மாறி விடுகிறேன் என்றான். இதனால், நான் அமைதியாக ஓரமாக இருந்தேன்.

ரயில் வேகமெடுத்ததும் திடீரென்று ஆடைகளை கழற்றி விட்டு என்னிடம் வந்தான். எனது ஆடையையும் கழற்ற முயன்றான். நான் கெஞ்சினேன். என்னை விட்டு விடு என்று கதறினேன் . அவசர சங்கிலியை இழுக்க சீட்டின் மேல் ஏறினேன். என்னை அடித்து கீழே தள்ளினான். நானும் அவனை அடித்தேன். அப்போது, உதைத்து எனது வலது கையை உடைத்தான்.

அப்புறம் எட்டி உதைத்து கீழே தள்ளினான். எனக்கு மயக்கம் வந்துவிட்டது. அவன்கிட்ட சுமார் அரை மணி நேரம் போராடினேன். இது போன்ற சைக்கோக்களை வெளியே விடவே கூடாது. பெண்களுக்கு தரையிலும் பாதுகாப்பில்லை. ஓடும் ரயிலிலும் பாதுகாப்பில்லை. பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாமல் போய் விட்டது’ என்று கூறியுள்ளார்.

தற்போது அந்த கர்ப்பிணி பெண் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கை, கால்களில் அவருக்கு முறிவு ஏற்பட்டிருப்பதால சிகிச்சை பெற்று வருகிறார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால் அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.
இதன் முடிவு வந்ததும் அடுத்தக்கட்ட சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share