வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் : ஜாக்டோ ஜியோ

Published On:

| By christopher

முதல்வர் ஸ்டாலினை இன்று (பிப்ரவரி 14) சந்தித்து பேசிய நிலையில், தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,  30 சதவீத காலி அரசுப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் கடந்த 7 வருடங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் அரசு தரப்பில் நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

இந்த நிலையில் நாளை பிப்ரவரி 15ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது எனவும், அதைத் தொடர்ந்து பிப்ரவரி 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தனர்.

அப்போது தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்து அரசு நிறைவேற்றி  தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து தங்களது போராட்டத்தை திரும்ப பெறுவதாக ஜாக்டோ ஜியோ தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் மாநில நிர்வாகி மு.அன்பரசு பேசுகையில், “எங்களுடன் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு உள்ளிட்ட 3 அமைச்சர்கள் தலைமையில் நேற்று அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதல்வரிடம் நேரடியாக சந்தித்து பேச வேண்டும் என்று கோரியிருந்தோம்.  அதன்படி முதல்வர் ஸ்டாலினை இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் 30 ஒருங்கிணைப்பாளர்களும் சந்தித்தோம்.

அப்போது பழைய ஓய்வூதிய திட்டம், சரண் விடுப்பு போன்ற எங்களது முக்கிய கோரிக்கைகள் அனைத்தையும் கேட்ட முதல்வர், அவற்றை நிச்சயம் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

தொடர்ந்து அவர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் நாளை நடைபெற இருந்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தையும்,  பிப்ரவரி 26 முதல் நடைபெற இருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தையும் நாங்கள் வாபஸ் பெறுகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்

மாநிலங்களவை தேர்தல்: சோனியா காந்தி வேட்புமனுத் தாக்கல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel