ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் இன்று முதல் ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணி தொடங்கியது.
இன்று காலை முதல் வங்கிகளில் ரூ.2000 தாளை மாற்றிக் கொள்ள பொது மக்கள் வங்கிகளுக்கு சென்றனர். ஆனால் 2016ல் வங்கி வாசலில் நின்றபடி, எதிர்பார்த்த அளவுக்கு இந்த ஆண்டு கூட்டம் இல்லாததையே காண முடிந்தது.
செப்டம்பர் 30 வரை மாற்றிக்கொள்ளலாம் என்று அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாலும், வெயிலின் தாக்கத்தாலும் கூட்டம் வரவில்லை என்று வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் மின்னம்பலத்திடம் சேப்பாக்கம் ஐஓபி வங்கி கிளை அதிகாரிகள் கூறுகையில், “தற்போது நடுத்தர மக்களிடம் பெரும்பாலும் 2000 ரூபாய் நோட்டுகள் இல்லை. காலையில் இருந்து ஒருசிலர் தான் ரூ.2000 நோட்டுகளை மாற்ற வந்தனர். வெயில் காரணமாகக் கூட வராமல் இருக்கலாம்” என்றனர்.
வங்கியில் 2000 ஆயிரம் நோட்டுகளை மாற்ற வந்த ஒருவர் கூறுகையில், “நான் நடுத்தரவாதி. இருக்கிற கஷ்டத்தில் கையில் கிடைக்கும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைக்கிறோம். திடீரென இது செல்லாது, அது செல்லாது என்று சொன்னால் என்ன செய்வது.
வங்கியில் தற்போது மாற்றிக்கொள்ள வந்தால், வருமான வரித்துறை ரெய்டு வந்தால் பதில் சொல்லிக்கொள்ளுங்கள் என்கிறார்கள். இந்த காசை எவ்வளவு கஷ்டப்பட்டு சேர்க்கிறோம் என்று எங்களுக்குத் தான் தெரியும். படிப்பு உள்ளிட்ட செலவுகளுக்காக சேர்த்து வைத்த காசை மாற்றுவதற்கு இங்கு வந்து காத்திருக்க வேண்டியிருக்கிறது” என்றார்.
ரூ.2000 தாள்களை மாற்ற வந்த உசைன் பாஷா கூறுகையில், “இது தேவையில்லாத பிரச்சினை. இந்த 2000 ரூபாய் என்பது என்னுடைய உழைப்பு, சேமிப்பு. இந்த நோட்டுகளை திரும்பப் பெறுவதன் மூலம் பாதிப்பில்லை என்கிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. என்னுடைய உழைப்பை அடிமட்டத்தில் இருந்து காலி செய்வது போல் இருக்கிறது. வங்கிகளில் மாற்றிக் கொள்வதில் எந்த சிரமும் இல்லை. ஆனால் வங்கிக்கு வந்து செல்வதெல்லாம் எங்களுக்குத் தேவையா” என கேள்வி எழுப்பினார்.
பிரியா
போலீசாரின் காரை எட்டி உதைத்த நடிகை: பாய்ந்தது வழக்கு!
யுபிஎஸ்சி தேர்வு : ஐபிஎஸ் அதிகாரியாகும் மதிவதனி