தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 13) பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் கடந்த 11ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது வட தமிழ்நாட்டை நோக்கி நேற்று நகர்ந்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலு இழந்து, காற்று சுழற்சியாக கிழக்கு காற்றை ஈர்க்கத் தொடங்கும் என்றும், இதனால் தமிழ்நாட்டில் வருகிற 16-ந் தேதி வரை மழைக்கான வாய்ப்பு உள்ளது, எனினும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் இன்று தமிழகத்தில் மழை எப்படி இருக்கும் என தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், “புதுச்சேரி, கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மழைப்பதிவு 100 மில்லிமீட்டர் எட்டியுள்ளது. அந்த பகுதி முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது.
சென்னையில் மிதமான மழை பெய்து வருகிறது. நாமக்கல், அரியலூர், பெரம்பலூரிலும் நல்ல மழை பெய்துள்ளது.
இன்று முதல் உள்மாவட்டங்களும் மழை பெறும். கோவை, ஈரோடு போன்ற மேற்கு மாவட்டங்களில் மழை பெய்யும். நெல்லை, தூத்துக்குடியிலும் மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை சில இடங்களில் கனமழை பெய்யும். பகல் வேளையில் சிறிய மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது” என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கனமழை எதிரொலி : இன்று எந்நெந்த மாவட்டங்களில் விடுமுறை தெரியுமா?
பணிகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள்: என்ன காரணம்?