நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
சிறுவன் உயிரிழப்பு
சென்னை பள்ளிக்கரணை, ராஜேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் (32). விடுமுறை தினமான நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 26) குடும்பத்தினர் மற்றும் உறவினருடன் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் குளத்திற்கு வந்துள்ளார். நீச்சல் குளத்தின் ஒரு பகுதியில் அனைவரும் குளித்துக் கொண்டிருக்க, ஹரிஹரனின் மகன் அனிருத் கிருஷ்ணன் (4) பாட்டியுடன் குளித்து கொண்டிருந்தான்.
அனைவரும் குளித்து முடித்து விட்டு வெளியேறிய போது அனிருத் கிருஷ்ணனை காணவில்லை. இதனால் பதறிப்போன குடும்பத்தினர் சிறுவனை நீச்சல் குளத்தில் தேடியுள்ளனர். அப்போது, நீச்சல் குளத்தின் அடியில் அனிருத் மயங்கிய நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுவனை தூக்கி கொண்டு வந்து முதலுதவி அளித்தனர்.
பின்னர் மயங்கிய நிலையில் அவனை அருகில் உள்ள கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் மூச்சு திணறி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
நீச்சல் குளம் மூடல்
இந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் வந்த அண்ணா சதுக்கம் போலீசார் சிறுவனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அண்ணா நீச்சல் குளத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் கவனக்குறைவால் சிறுவன் உயிரிழந்திருக்கலாம் எனவும், எந்த பாதுகாப்பு உபகரணமும் கொடுக்காமல் ஊழியர்கள் எப்படி சிறுவனை அனுமதித்தனர் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அண்ணா நீச்சல் குளம் பராமரிப்பு பணி காரணமாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தற்காலிகமாக மூடி வைத்துள்ளது.
முதல்வர் நிவாரணம்
சிறுவன் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், “சிறுவனின் இறப்பு குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளேன்.
சிறுவன் அனிருத்தை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தக்க நடவடிக்கை எடுக்கப்படும்
சிறுவன் நீச்சல் குளத்தில் இறந்தது தொடர்பாக நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சென்னை துணை மேயர் மகேஷ் குமார்,
”சென்னையில் உள்ள அனைத்து நீச்சல் குளங்களும், விளையாட்டு மைதானங்களும் மாநகராட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டு ஒப்பந்தங்கள் கோரப்பட உள்ள நிலையில் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளை அழைத்து அறிவுறுத்தியுள்ளார்.
நீச்சல் குளத்தில் விதிகளை கடுமையாக மாற்றி அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இன்று காலை மாநகராட்சி ஆணையரிடத்தில் பேசி என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசித்துள்ளோம்.
தொடர்ந்து மாநகராட்சி துணை ஆணையர் மற்றும் மேயருடன் கலந்து ஆலோசித்து இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் இருக்க நடவடிக்க எடுக்க உள்ளோம்.
ஏற்கனவே நீச்சல் குளத்தில் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் குளிக்க அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்தியிருந்தோம். அவை பின்பற்றப்படுகிறதா இல்லையா என்பது குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெற்றோர்களிடமும் குழந்தைகளை பெரிய குளத்தில் நீச்சல் பயிற்சி கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தோம். இருப்பினும் நீச்சல் குளத்தில் குழந்தையை அனுமதிக்காமல் அங்கு பணியில் இருந்தவர்கள் கண்காணித்து இருக்க வேண்டும். இதில் எங்கு தவறு நடந்தது என்று விசாரித்து இறுதியில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத அளவிற்கு நிபந்தனைகளுடன் கூடிய திட்டங்கள் வகுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மோனிஷா
கோவாவில் குறையும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை: காரணம் என்ன?
மகள் இயக்கும் ’லால் சலாம்’: சம்பளத்தில் கறாராக இருக்கும் ரஜினிகாந்த்