மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள உழவர் சந்தை மீண்டும் புதுப்பொலிவு பெறுமா என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் கடந்த திமுக ஆட்சியின்போது உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டன. விவசாயிகள் விளைவிக்கும் கீரை, வாழை, புடலங்காய், கத்திரிக்காய், வெண்டைக்காய், சோளம், பாகற்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், வாழைப்பூ, வாழைப்பழம், கொய்யாப்பழம், தேங்காய் உள்ளிட்டவற்றை விவசாயிகள் நேரடியாக இந்த உழவர் சந்தையில் விற்கலாம்.
அந்த வகையில் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் அமைக்கப்பட்ட உழவர் சந்தையில் விவசாயிகள் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாகவே தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்து பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த உழவர் சந்தை முறையாக பராமரிக்கப்படவில்லை. தற்போது செயல்படும் உழவர் சந்தையில் குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகள் மட்டுமே வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளும் இல்லாததால் உழவர் சந்தையில் பொலிவிழந்து காணப்படுகிறது.
மேலும் உழவர் சந்தை முன்பு வெளிப்பகுதியில் சாலையோரம் சட்டவிரோதமாக வியாபாரிகள் கடை போட்டு காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதால் உழவர் சந்தைக்கு உள்ளே பொதுமக்கள் வருவதை தவிர்த்து வருகின்றனர். எனவே சீர்காழியில் உழவர் சந்தை மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
-ராஜ்