சீனாவில் பிஎப்7 கொரோனா வைரஸ் தீயாய் பரவி வரும் நிலையில் அங்கிருந்து மதுரை வந்த இருவருக்கு அதே வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.
இந்தியாவில் 4 பேருக்கு பிஎப்7 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி சீனாவிலிருந்து நேற்று மதுரை வந்த தாய் சேய் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் இன்று (டிசம்பர் 28) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
“சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்த 36 வயது பெண்ணுக்கும் , அவரது பெண் குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இவர்களை அப்பெண்ணின் சகோதரர் தனது காரில் விருதுநகர் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இருவரும் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களைக் கண்காணிக்க ஒரு சுகாதாரத் துறை அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பெண்ணின் சகோதரர் சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். இதை அறிந்த சுகாதார அதிகாரிகள் திரும்ப வர கூறியுள்ளனர். இதனால் அவர் மீண்டும் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றுவிடுவார். அவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இவர்களுடன் பயணித்த இன்னொரு குழந்தைக்குத் தொற்று பாதிப்பு இல்லை என ரிசல்ட் வந்தது. அதே சமயத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகள் சென்னைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது. அது மரபணு செய்யப்பட்ட பிறகுதான் அது பிஎப்7 என்பதா எனத் தெரியவரும்.
பிஎப்7 வேகமாகப் பரவும் வைரஸ் என்பதால் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடும் போது மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
இது கட்டாயமாக்கப்படவில்லை என்றாலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம்” என்றார்.
பிரியா
திமுகவின் 23 அணிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
கனிமொழி -தயாநிதி மாறன்- அழகிரி : கோபாலபுரம் குடும்பத்துக்குள் நட்டா வீசிய தோட்டா!