ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேரையும் உச்ச நீதிமன்றம் கருணை அடிப்படையில் விடுதலை செய்யவில்லை என்று நளினி தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேர் இன்று(நவம்பர் 11) விடுதலை செய்யப்பட்டனர்.
எதன் அடிப்படையில் 6 பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள் என்று நளினி தரப்பு வழக்கறிஞர் ஆனந்தசெல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
“இந்த விடுதலை என்பது கருணை சம்மந்தமானது இல்லை. அவர்களுடைய நன்னடத்தை, கல்வித்தகுதி, உடல்நிலை மற்றும் அரசமைப்புச் சட்டத்தில் வழங்கியிருக்கக்கூடிய அதிகாரப் பகிர்வு,
மாநில அமைச்சரவையானது ஏற்படுத்திய தீர்மானத்தின் அடிப்படை மற்றும் ஆளுநர் ஒரு முடிவை எடுக்காமல், கையெழுத்திடாமல் வேண்டுமென்றே கால தாமதம் செய்தது தவறு என்று பல காரணங்களை காட்டி நீதிமன்றம் இந்த விடுதலையை வழங்கியிருக்கிறது.
இந்த காரணங்களுடன், பல நீதிமன்றங்களின் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி எங்களுடைய மனுவை தாக்கல் செய்தோம்.
அதனடிப்படையில் நீதிமன்றம் இன்று அனைவருக்கும் விடுதலை அளித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
நன்னடத்தை அடிப்படையிலும், பல ஆண்டுகளாக சிறையில் அவர்கள் கொடுமைகளை அனுபவித்ததை கருத்தில்கொண்டும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தமிழக அரசின் அமைச்சரவை தீர்மானம் 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்றுதான் பரிந்துரைத்தது.
அதனடிப்படையில்தான் பேரறிவாளனும் விடுதலை செய்யப்பட்டார். அதே முகாந்திரங்கள்தான் இன்றும் நிலைத்திருக்கிறது.
ஏனென்றால் ஆளுநரானவர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆளுநரின் கால தாமதம் என்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று வழக்கறிஞர் ஆனந்தசெல்வம் தெரிவித்தார்.
கலை.ரா
6 பேரும் விடுதலை : தீர்ப்பில் நீதிபதிகள் சொன்னது என்ன?
“அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி”- டி.கே.எஸ். இளங்கோவன் கருத்து!