அதிக இனிப்பு ஆரோக்கியக் கேடு என்று தெரிந்தாலும் அடிக்கடி இனிப்பு சாப்பிடுகிறவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இவர்களால் அதைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், ‘இனிப்புத் தேடல் என்பது உங்கள் ஆரோக்கியத்தில் பிரச்சினை இருப்பதன் அறிகுறியாகவும் இருக்கலாம்’ என்கிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.
“ரத்தச் சர்க்கரை அளவுகளில் சமநிலையின்மை இருப்பவர்களுக்கு இனிப்புத் தேடல் இருப்பது சகஜம். ரத்தச் சர்க்கரை அளவு குறையும்போது, அதை சமன்படுத்த, இனிப்பாக ஏதேனும் சாப்பிட நினைப்பார்கள். சிலர் மன அழுத்தத்தில் இருக்கும்போது அதிகம் சாப்பிடுவதைப் பார்க்கலாம். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்ட்டிசால் ஹார்மோன் அதிகரிக்கும்போது, கூடவே இன்சுலின் அளவும் அதிகரித்தால், அதன் விளைவாக எதையாவது சாப்பிடத் தோன்றும். பெரும்பாலானவர்கள் அதிக இனிப்பும் அதிக கொழுப்பும் உள்ள உணவுகளையே இந்த நேரத்தில் விரும்புவார்கள்.
மாதவிடாய் காலத்திலும், கர்ப்ப காலத்திலும் பெண்களின் உடலில் ஹார்மோன்கள் சமநிலையின்மை சகஜமாக நடக்கும். அது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற வேட்கையைத் தூண்டலாம். எடையைக் குறைப்பதாக நினைத்துக்கொண்டு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் கன்னாபின்னா டயட்டை சிலர் பின்பற்றலாம். அதனால் சில ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படலாம். இனிப்புத் தேடல் என்பதை, ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கான அலர்ட்டாக நினைத்து உடலைக் கவனிப்பது அவசியம்.
முக்கியமாக மருத்துவர் பரிந்துரையின்றி, மருந்துக் கடைகளில் வாங்கும் மருந்துகளை ‘ஓவர் த கவுன்ட்டர் டிரக்ஸ்’ என்கிறோம். அப்படிப் பயன்படுத்தும் சில மருந்துகள் நம் உடலின் ஊட்டச்சத்து உட்கிரகிப்பை பாதித்து, இனிப்புத் தேடலைத் தூண்டலாம்” என்று அடிக்கடி ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்கிற ஆவலை ஏற்படுத்தும் காரணத்தை விளக்கும் ஊட்டச்சத்து ஆலோசகர்கள், எப்படி மீள்வது என்கிற தீர்வையும் சொல்கிறார்கள்.
“என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை சுவையால் மட்டுமன்றி, மனதாலும் அனுபவித்து ரசித்து, ருசித்துச் சாப்பிடுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவானது உங்கள் உடலில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று உணர்ந்து சாப்பிடுங்கள். அந்தத் தெளிவு இருந்தால், தேவையற்ற இனிப்புத் தேடலைத் தவிர்க்கலாம். கடலை மிட்டாய், நட்ஸ், சீட்ஸ், பழங்கள், உலர் பழங்கள், மக்கானா, காக்ரா என ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இனிப்புத் தேடல் ஏற்படும்போது இவற்றை சிறிது சாப்பிடலாம்.
ஷாப்பிங் போகும்போது தள்ளுபடி விற்பனையில் கிடைக்கிறது என்பதற்காக தேவையற்ற இனிப்புகள், சாக்லேட், கேக் போன்றவற்றை வாங்க வேண்டாம். உடலில் நீர் வற்றும்போது அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், உணவுத் தேடலாக பலரும் நினைத்துக் கொள்வதுண்டு. தாகமா, பசியா என்பதை வேறுபடுத்திப் பார்த்தாலே இதைத் தவிர்க்கலாம். தண்ணீர் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டியது முதல் விஷயம். தண்ணீராக மட்டுமன்றி, நீர் மோர், சீரகம் சேர்த்த தண்ணீர், பாதாம் பால், சோயா பால், தேங்காய்ப்பால், ரசம், சூப் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.
உங்கள் உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடு என நினைத்துக்கொண்டு நீங்களாக மருந்துக் கடைகளில் வைட்டமின் சப்ளிமென்ட் உள்ளிட்டவற்றை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். அதுவும் இனிப்புத் தேடலுக்கும் உணவுத் தேடலுக்கும் காரணமாகலாம். மருத்துவ ஆலோசனையின்றி சப்ளிமென்ட் எடுப்பது தவறானது” என்று அடிக்கடி ஸ்வீட் சாப்பிட நினைப்பவர்களுக்கான தீர்வையும் விளக்கியுள்ளனர்.
செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
தகுதி நீக்கம் செய்தாலும் வயநாட்டுடனான உறவு முறியாது: ராகுல் காந்தி
ஜெயலலிதா சட்டமன்றத்தில் தாக்கப்பட்டது உண்மை: தமிழிசை சவுந்தரராஜன்