சசிகலா மற்றும் இளவரசிக்கு பெங்களூரில் உள்ள லோக் ஆயுக்தா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் 2017 முதல் 2021 வரை 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர்.
பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது சொகுசு வசதிகள் செய்து தர அதிகாரிகளுக்கு சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா அறிக்கை தாக்கல் செய்திருந்தார். சசிகலா சிறையில் இருந்து வெளியில் சென்று வந்தது போன்று புகைப்படங்களும் வெளியாகின.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று சென்னையை சேர்ந்த கீதா கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுபடி, சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் மீது கர்நாடக மாநில லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு நேற்று (செப்டம்பர் 4) விசாரணைக்கு வந்த போது, ரூ.2.கோடி லஞ்சம் கொடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால் சசிகலா மற்றும் இளவரசிக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இவர்கள் இருவருக்காக ஜாமீன் கையெழுத்திட்ட நபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி ராதாகிருஷ்ணன், வழக்கை அக்டோபர் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
பிரியா