லியோ திரைப்பட விவகாரத்தில் அரசியல் எதுவும் செய்யவில்லை என்று அமைச்சர் சாமிநாதன் இன்று (அக்டோபர் 12) தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய், நடிகை திரிஷா நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லியோ படம் உருவாகியுள்ளது.
வரும் அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியது.
அக்டோபர் 19ஆம் தேதி காலை 4 மணி மற்றும் 7 மணி சிறப்புக் காட்சிகளுக்கும், அக்டோபர் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னி மலையில் இன்று (அக்டோபர் 12) செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதனிடம் லியோ படம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
“துணிவு படத்துக்குப் பிறகு எந்த படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், லியோ படத்திற்கு அனுமதி வழங்கியது ஏன்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் சாமிநாதன், “விழாக்கள் காலங்களில் ஒரு காட்சி கூடுதலாக வெளியிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
சிறப்புக் காட்சிகள் வேண்டும் என்று கேட்பவர்களுக்குச் சூழ்நிலைக்கு ஏற்ப பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய காலங்களில் பல்வேறு படங்களுக்குச் சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் அரசியல் எதுவும் இல்லை.
விஜய் அரசியலுக்கு வரலாம், வராமல் கூட இருக்கலாம். அது யூகமாகக் கூட இருக்கலாம். லியோ படத்திற்கு முட்டுக்கட்டை போட வேண்டிய அவசியம் அரசுக்கு எதுவும் இல்லை.
திரைப்படத்தில் தவறான வார்த்தைகள் பயன்படுத்துவதெல்லாம் மத்திய அரசின் சென்சார் போர்டு தான் பார்க்கும்.
விக்ரம் திரைப்படத்திற்குச் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஜெயிலர் திரைப்பட சிறப்பு காட்சிக்கு முன்கூட்டியே அனுமதி எதுவும் கேட்கப்படவில்லை” என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…