விஷ சாராய விற்பனையை தடுக்காதது ஏன்?: சிறப்பு குழு விசாரணை!

தமிழகம்

விஷ சாராயம் மரணம் தொடர்பான வழக்கை விசாரிக்க சிபிசிஐடி கூடுதல் டிஜிபி தலைமையில் சிறப்பு குழு ஒன்றை டிஜிபி சைலேந்திரபாபு அமைத்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல்நிலையம் , விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்ததில் 22 பேர் உயிரிழந்தனர். சிலர் கண் பார்வை இழந்துள்ளனர். சிலருக்கு கிட்னி பிரச்சினை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இருந்தாலும் சிடி பைல் (கேஸ் டைரி) இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்கிறார்கள் உள்ளூர் போலீசார்.

இந்நிலையில், விஷ சாராய விற்பனையை தடுக்க தவறியது ஏன்? எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என விசாரிக்க சிபிசிஐடி கூடுதல் டிஜிபி வெங்கட்ராமன் தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு. 

கூடுதல் டிஜிபி வெங்கட்ராமன் தலைமையில் ஐஜி முரளி மனோகர் ஜோஷி (தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார், ஐஜியாக அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்) மற்றும் எஸ்பி முத்தரசி மேற்பார்வையில் குழு அமைக்கப்பட்டது.

ஏற்கனவே, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இவ்வழக்கை விசாரிக்க ஏடிஎஸ்பி மகேஷ்வரி தலைமையில் டிஎஸ்பி வேல்குமார், இன்ஸ்பெக்டர், எஸ்ஐ போலீஸ் என ஒரு டீம் அமைக்கப்பட்டது. 

விழுப்புரம் மாவட்டத்திற்கு ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் டிஎஸ்பி சசிதர் மற்றும் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ போலீஸார் என ஒரு டீம் அமைக்கப்பட்டு சல்லடை போட்டு விசாரணை செய்து வருகின்றனர். 

கள்ளச்சாராயத்தை தடுக்க போலீசுக்கு மட்டும்தான் கடமையா? 

கள்ளச்சாராய விற்பனையை கண்காணிப்பதும் அதனை தடுப்பதும் மதுவிலக்கு அமலாக்கத் துறையின் முக்கியமான பணியாகும்.

அதேபோல்  ஒவ்வொரு கிராமத்திற்கும் கிராம வருவாய் அலுவலர் இருப்பார். இவருக்கு சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதில் முக்கிய பங்கு உண்டு. கிராமத்தில் அடையாளம் தெரியாத புதிய நபர்கள் நடமாட்டம் இருந்தாலோ, சந்தேகப்படும்படியான ஆள் நடமாட்டம் இருந்தாலோ கண்காணித்து உள்ளூர் போலீசுக்கு தகவல்கள் தெரிவிக்கவேண்டும். அதேபோல் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்தாலும் தகவல்கள் கொடுக்க வேண்டும். அப்படி ஏதாவது மரக்காணம் மற்றும் சித்தாமூர் பகுதி கிராம அலுவலர்கள் தகவல் கொடுத்தார்களா என்றும் விசாரிக்கிறது இந்த சிறப்பு குழு.

குற்றத்தை தடுப்பது காவல் கண்காணிப்பாளர் பணி. சட்டம் ஒழுங்கு கவனிக்கக்கூடியவர் மாவட்ட ஆட்சியர். அவர்தான் மாதந்தோறும் மாவட்ட காவல்துறை மற்றும் நீதித்துறையுடன் மீட்டிங் நடத்துவார். கள்ளச்சாராய விற்பனை குறித்து மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளருடன் ஆலோசனை நடத்தினாரா என்ற தகவல்களையும் சிறப்பு குழு விசாரித்து வருகிறது.

“மரக்காணம் எக்கியர்குப்பம் மீனவர்களிடம் சிறப்பு குழு நடத்திய விசாரணையில், நான்கு வருடங்களுக்கு முன்பு சாராயம் விற்பனை செய்ய ஏலம் விடுவார்கள். ஆனால் தற்போது ஏலம் விடாமல் கள்ளச்சாராயம் விற்பனை செய்கிறார்கள் ” என்று தெரிவித்துள்ளனர்.

காவல் நிலையங்களில் மாமூல்!

மேலும் சிறப்பு குழு நடத்திய விசாரணையில், “விழுப்புரம் மாவட்டத்தில் நான்கு காவல் உட்கோட்டம், நான்கு டிஎஸ்பிகள், நான்கு போக்குவரத்து காவல் நிலையம், நான்கு அனைத்து மகளிர் காவல் நிலையம், நான்கு (கலால்) மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையம், 30 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன 

ஒவ்வொரு காவல் நிலையத்தில் இருந்தும் தங்கள் பகுதியில் நடக்கும் சட்டவிரோத வணிகம் தொடர்பான புகார்களை காவல் கண்காணிப்பாளரிடம் கொண்டு செல்லாமல் இருக்க மேலதிகாரிகளுக்கு மாமூல் கொடுக்கிறார்கள்.

எஸ்பி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு ரூ 5000 , டிஏ(டெய்லி அலோவன்ஸ்) பில் க்ளைம் செய்ய டிஏ பிரிவு சூப்பிரண்டுக்கு ரூ 2000 , டிசிஆர்பிக்கு ரூ 2000 ( மாதந்தோறும் ரிவியூ ரெக்கார்ட்ஸ் மெயின்டன்ஸ் செய்ய) , டிஎஸ்பி கேம்ப் ஆபிஸுக்கு ரூ 3000 , டிஎஸ்பி ஸ்டேஷன் விசிட் வந்தால் கேம்ப் ஆபிஸுக்கு ரூ 5000 என ஒவ்வொரு காவல் நிலையத்தில் இருந்தும் அதிகாரிகளுக்கு மாமூல் கொடுக்கிறார்கள்.

இப்படி,ஒரு காவல் நிலையம் மாதம் ரூ.17 ஆயிரம் மாமூல் கொடுத்தால், 30 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் மாதம் ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் அளவுக்கு கொடுக்கிறது.  இதில் வருமானம் உள்ள காவல் நிலையம் இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு கொடுப்பார்கள். 

அதுபோன்று, ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் மாதம் சுமார் ரூ 40 ஆயிரம் செலவாகும். துப்புரவு பணியாளர் மாத சம்பளம் ரூ 5000 , குற்றவாளிகளை ரிமான்ட்க்கு அழைத்துபோக வாடகை வாகனம், ஸ்டேஷனரி பொருட்கள் தேவையான அளவுக்கு காவல் துறை தலைமை கொடுப்பது இல்லை, அதனால் பேப்பர் ஃபிரின்ட் எடுக்க தேவையான டோனர், பேனா, பென்சில், பேப்பர் ஸ்டேஷனரி செலவு, ரெக்கார்ட்ஸ் வேலை செய்ய ஓய்வு பெற்ற போலீசுக்கு சம்பளம், டீ செலவு, விஐபி வந்தால் செலவு ஆகியவை இருக்கிறது. இந்த தொகையை ஒவ்வொரு காவல் நிலையமும் சி பார்ட்டி மூலம் வசூலிக்கிறார்கள். சி என்றால் மாமூல் பார்ட்டி. 

சாராயம், டாஸ்மாக், டாஸ்மாக் பார், லாட்டரி சீட், பங்க் கடை ஹான்ஸ், போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் இருந்து காவல்துறை அதிகாரிகள் மாமூல் வாங்குகிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து காவல் நிலைய செலவை சமாளிக்கிறார்கள்.

காவல்துறையினர் ஒவ்வொரு மாதமும் வாங்கும் மாமூல் தொகையை ஒழித்தால் குற்றங்கள் குறையும். தடைசெய்யப்பட்ட பொருள் விற்பனையில் இருக்காது” என்ற தகவல்கள் கிடைத்துள்ளது சிறப்பு குழுவினருக்கு. 

“கள்ளச்சாராய மரணம் தொடர்பான விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய வருவாய் துறை அதிகாரிகள் மீது சிறப்பு குழுவினரின் விசாரணை நடவடிக்கைகள் பாயலாம்” என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்

வணங்காமுடி

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி!

யாதும் ஊரே யாவரும் கேளீர், பிச்சைக்காரன் – 2 : வசூல் எப்படி?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *