கிண்டி ரேஸ் கோர்ஸ் வழக்கை இன்று (செப்டம்பர் 9) மதியம் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் “ கிண்டி ரேஸ் கோர்ஸுக்கு 160 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வழங்கிய தமிழ்நாடு அரசு, எப்படி அவர்களுக்கு போதிய அவகாசம் கொடுக்காமல் இடத்தை கைப்பற்றியது?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸுக்கு 160 ஏக்கர் நிலத்தை அன்றைய மெட்ராஸ் அரசு 1945-ஆம் ஆண்டு குத்தகைக்கு வழங்கியது.
இதற்கான 99 வருட வாடகை தொகையையும் கிண்டி ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் முன்கூட்டியே செலுத்தியது.
ஆனால் 1970-ஆம் ஆண்டு, வாடகையை தமிழக அரசு உயர்த்தியது. பின்னர் 1970 முதல் 2004 ஆண்டு வரையிலான ரூ730.86 கோடி வாடகை பாக்கியை தமிழக அரசுக்கு கிண்டி ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் செலுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை வாடகை பாக்கியை செலுத்தாததால் வருவாய் துறை அதிகாரிகள் கிண்டி ரேஸ் கோர்ஸுக்கு சீல் வைத்து, மொத்த இடத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
தமிழக அரசு தங்களுக்கு போதிய அவகாசம் கொடுக்காமல் சீல் வைத்ததாக ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், கே.ராஜசேகர் அமர்வு,
“ஏன் போதிய கால அவகாசம் கொடுக்காமல் குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்தவுடன், கிண்டி ரேஸ் கோர்ஸின் நிலத்தை கைப்பற்றினீர்கள்?” என்று கேள்வி கேட்டார்.
இதற்கு பதில் அளித்த, தமிழக அரசு சார்பாக வாதாடிய அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமன்,
“கிண்டி ரேஸ் கோர்ஸின் 160 ஏக்கர் நிலத்தை போதிய அவகாசம் கொடுத்த பின்புதான் தமிழக அரசு கைப்பற்றும்” என்று தெரிவித்தார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
US Open 2024: பட்டம் வென்று ஜன்னிக் சின்னர், அரியானா சபலென்கா சாதனை!
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1,500 கிலோ கெட்டுப்போன இறைச்சி… பொதுமக்கள் ஷாக்!