ரவுடிகளுக்கு எதற்கு பட்டப்பெயர் வைக்கிறீர்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளாக தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ரூதினை, மதுரை மத்திய சிறைக்கு மாற்றக்கோரி அவரது தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராமன் அமர்வில் இன்று (ஜனவரி 24) விசாரணைக்கு வந்தது.
அப்போது, பட்டப்பெயர் இல்லாமல் ரவுடிகளின் பெயர்களை போலீஸ் ஏன் பதிவு செய்வது இல்லை? பாம் சரவணன்… பாம் நாகராஜன் என ரவுடிகளுக்கு எதற்கு பட்டப்பெயர்? இந்த பெயர்களை கேட்டாலே பயமாக இருக்கிறது.
பட்டப்பெயர்களுக்கு பதிலாக அவர்களது தந்தையின் பெயரையே சேர்க்கலாமே? சிறைசாலைகளில் அடைக்கப்படும் ரவுடிகள் மேலும் தீவிர ரவுடிகளாகத்தான் மாறுகின்றனர்.
பட்டப்பெயரால் விடுதலைக்கு பின் குற்றவாளிகள் பெரிய குற்றவாளிகளாக உருவெடுக்கின்றனர்.
போலீஸ் பக்ரூதீன் என்று எப்படி அவருக்கு பெயர் வந்தது? அவர்களுக்கு அவ்வாறு பெயர் வைப்பதே காவல்துறை தான். எனவே இது போன்று பட்டப்பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டுமென நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
கடந்த 2011ம் ஆண்டு அத்வானி ரத யாத்திரையின்போது மதுரை திருமங்கலம் அருகே ஆலம்பட்டி தரைப் பாலத்தில் பைப் வெடி குண்டுகள் வைத்த வழக்கு, சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை உள்ளிட்ட வழக்குகளில் பக்ரூதீன் கைதாகி சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.